மணப்பாறை அருகே ரூ.1,385 கோடியில் காகித ஆலை விரிவாக்க பணி துவக்கம்

மணப்பாறை அருகே ரூ.1,385 கோடியில் காகித ஆலை விரிவாக்க பணி துவக்கம்
X

மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி காகித ஆலை விரிவாக்க பணியை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

மணப்பாறை அருகே ரூ.1,385 கோடியில் காகித ஆலை விரிவாக்க பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

மணப்பாறை அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு இரண்டில் 1, 385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலை விரிவாக்க பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி என்ற கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அலகு இரண்டின் முதல் கட்ட ஆலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 1,385 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் திறன் கொண்ட வன்மரக்கூழ் தயாரிக்கும் பிரிவு ரசாயன மீட்பு கொதிகலன் பிரிவு மற்றும் 20 மெகாவாட் திறன் கொண்ட மின் ஆக்கி பிரிவு ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்த ஆலையின் விரிவாக்க திட்ட பணிகள் கொரோனா காலகட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் சிறந்த தரத்திலான காகித கூழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை விரிவாக திட்டத்தின் மூலம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு கூழ் மற்றும் காகித அட்டை தயாரிக்கும் ஒருங்கிணைந்த ஆலையாக மாறி உள்ளது.இத் திட்டத்தின் மூலம் சுமார் 500 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு லட்சம் டன் திறன் கொண்ட இருபுறமும் மேற்பூச்சு செய்யப்படும் அடுக்கு காகித அட்டை ஆலை திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டி கிராமத்தில் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்தகட்ட வளர்ச்சியாக இந்நிறுவனத்தின் இரண்டாம் அலகில் ஆலையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆலை விரிவாக்கத் திட்டத்தை 2520 கோடி ரூபாய் மூலதனத்தில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆலை உருவாக்கத்தின் முதல் கட்ட பணி 1,385 கோடி செலவில் தற்போது நிறைவடைந்த நிலையில் நிதி ஆதாரங்களை பெற்ற பின் இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டமாக புதிய காகித அட்டை தயாரிக்கும் இயந்திரம், காகிதம் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் மின் ஆக்கியை நிறுவும் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழில் பூங்கா மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி மற்றும் சத்திரப்பட்டி கிராமங்களில் 1097.36 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்ட நிலையான 466.10 ஏக்கர் பரப்பளவில் 137.94 ஏக்கரில் உணவு பூங்காவும், 93.50 ஏக்கரில் பொது அறிவியல் பூங்காவும்,ரூ. 47.44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இத்தொழில் பூங்காவிற்கான நிர்வாக கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, மழை நீர் வடிகால், தெருவிளக்கு, நீர் விநியோகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.முழு நில ஒதுக்கீடு நிலையை அடையும் பொழுது 3,750 கோடி ரூபாய் அளவில் முதலீட்டை ஈர்ப்பதுடன் சுமார் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!