‘நோன்பு கஞ்சி காய்க்க அரிசி’- முஸ்லிம் லீக் தேசிய தலைவர் வேண்டுகோள்

ஐ.யு.எம்.எல். தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன்.
ரமலான் மாதத்தையொட்டி, பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான அரிசியை உடனே வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல், தான தர்மங்களை அதிகரித்து அவர்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். மேலும், பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தும் மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி காய்ச்சி நோன்பு திறப்பவர்களுக்கு வழங்கப்படும். பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசியை தமிழக அரசு வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்குவது பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதும், நோன்பினைத் துறக்க நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சியை வழங்குவதும் வழக்கமான நடைமுறையாகும். ஆண்டுதோறும் நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தமிழக அரசின் சார்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு, நோன்புக் கஞ்சிக்கான அரிசி தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வழங்க இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வருகின்றது.'' ''புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசி என்பது, வழக்கமான நடைமுறை என்பதாலும், புனித ரமலான் நோன்பு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள காரணத்தினாலும் தமிழக அரசு விரைவில் பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், மற்றும், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தனிக் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu