சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
X

பைல் படம்.

குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் இரவு நேர போக்குவரத்திற்கு அனுமதி வழங்கும் பரிந்துரைகளை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை-பெங்களூர் சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்ககோரி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்தும், அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் முறையாக அமல்படுத்துமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தாக்கல் செய்த அறிக்கையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களுக்கு தடை விதிக்கலாம் எனவும் யோசனை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

மேலும், இந்த முடிவுகளை அமல்படுத்த, 2019ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பரிந்துரை மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆட்சியரின் பரிந்துரை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் வழக்கின் இறுதி வாதங்கள் கேட்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!