திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சுவாமி சிலைகள் மீட்பு..
மீட்கப்பட்ட சுவாமி சிலைகள்.
தமிழகத்தில் உள்ள பழங்கால கோயில்களில் இருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சுவாமி சிலைகளை சிலர் வெகுநாள்கள் பதுக்கி வைத்து பின்னர் அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
மேலும், பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள், பழங்கால கற்சிலைகள், வெண்கலச் சிலைகள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு மீட்கப்பட்டது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், திருநெல்வேலி சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சகாய செல்வின், சிபின் ராஜ்மோன், நாகேந்திரன் மற்றும் போலீஸார் ராஜவல்லிபுரம் கிராமத்துச் சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, திடீரென அந்த ஊரை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் நடராஜன் என்பவரது வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில் போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, அந்த வீட்டில் இருந்து 5 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டன. 24 சென்டி மீட்டர் உயரம் உள்ள விநாயகர் சிலை, சிறிய விநாயகர் சிலை, சுவரில் மாட்டும் விநாயகர் சிலை, வடமாநிலத்தில் வழிபடக்கூடிய 8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட தாரா அம்மன் சிலை மற்றும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் சிலை ஆகிய 5 சிலைகள் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 5 சிலைகளும் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும், யாருக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என்பது குறித்தும் நடராஜனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடராஜனிடம் சிலைகளுக்கு உரிய எந்த ஆவணமும் இல்லை. இருப்பினும் அவர் பழங்கால பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், திரைப்படங்களில் கலைத்துறையில் பணியாற்றி வருவதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிலைகள் வடமாநில கோயில்களில் இருந்து திருடி கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையிலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், மீட்கப்பட்ட சிலைகள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதை அறிய டெல்லியில் உள்ள தொல்லியல் துறை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu