குடியரசு தினவிழா: சென்னையில் தேசியக்கொடி ஏற்றிவைத்தார் ஆளுனர்
நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில், தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில், இன்று காலை நடைபெற்ற குடியரசு தினவிழாவில், முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை, ஆளூநருக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
அதை தொடர்ந்து, ஆளுனர் ஆர்.என். ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, தமிழகத்தில் ஆளுனர் ரவி தேசியக்கொடி ஏற்றுவது இதுவே முதல்முறையாகும். பின்னர் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஆளுனர் ஏற்றுக் கொண்டார். முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனினும், சென்னையில் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழக அலங்கார ஊர்திகள் அணி வகுத்து வந்தன. அதை தொடர்ந்து வீரதீரம் புரிந்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரங்களை வழங்கினார்.
அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்போர் ராஜீவ் காந்திக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த காவல்நிலைய விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .
இதில், முதல் பரிசு திருப்பூர் தெற்கு நகர காவல்நிலையம், இரண்டாம் பரிசு திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையம் , மூன்றாம் பரிசு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு, பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu