தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்திறன்: தணிக்கைத் துறை அறிக்கை
உதய் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல் திறன் மீதான செயலாக்கத் தணிக்கை மற்றும் பொது நோக்கு நிதிநிலை குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்தாவது:
மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் பகிர்மான நிறுவனங்களின் (டிஸ்காம்) நிதி மேம்பாட்டை முன்னேற்றும் நோக்கத்துடன், உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜ்னா (உதய்) என்ற திட்டத்தை இந்திய அரசின் மின் அமைச்சகம், நவம்பர் 2015ல் அறிவித்தது. டிஸ்காம்களின் நிதிநிலையில் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டுத் திறன் மேம்படுத்துதல் மூலம் அனைவருக்கும் வாங்கக்கூடிய விலையில், 24x7 மின்சாரம் கிடைக்கச் செய்ய தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வழி வகை செய்யும் படி இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி, நிதி மற்றும் செயல்பாட்டு மைல்கற்களை அடைவதற்கான அந்தந்த தரப்பினரின் பொறுப்புகளைக் குறிப்பிட்டு, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜேட்கோ) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 2017-ல் கையெழுத்தானது.
உத்தேச இலக்குகளான டிஸ்காம்களின் நிதி நிலை முன்னேற்றம் மற்றும் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி செயல்பாட்டுத் திறன்களை செயல்படுத்துவதன் மூலம் இலக்கு வைக்கப்பட்ட செயல்பாட்டு மேம்பாட்டை டான்ஜேட்கோ அடைந்த பயனை மதிப்பீடு செய்ய இந்த செயலாக்கத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிதி மேலாண்மை
75 விழுக்காட்டு கடனை எடுத்துக் கொள்ள வேண்டிய இலக்குக்கு மாறாக, 34.38 விழுக்காட்டை மட்டுமே எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புக் கொண்டது. இந்த பற்றாக்குறை காரணமாக, டான்ஜெட்கோ ₹30,502 கோடி அளவிற்கு கடன் சுமையைத் தொடர்ந்தது, இதன் விளைவாக டான்ஜெட்கோவிற்கு ₹9,150.60 கோடி கூடுதல் வட்டிச் சுமை ஏற்பட்டது.
மீதமுள்ள 25 விழுக்காடு கடனை அதாவது ₹7,605 கோடியைப் பொறுத்தவரை, டான்ஜெட்கோ, மாநில அரசின் உத்தரவாதத்துடன் கூடிய குறைந்த வட்டி கொண்ட கடன் பத்திரங்களாக வெளியிட வேண்டியிருந்தது. டான்ஜெட்கோவின் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இதன் விளைவாக, அதிக வட்டி விகிதம் கொண்ட கடன்களைத் தொடர்ந்ததால், டான்ஜெட்கோவிற்கு ₹1,003.86 கோடி கூடுதல் வட்டிச் சுமை ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசின் பகுதி அளவு மட்டும் கடன் ஏற்பு, 25 விழுக்காடு கடனை பத்திரங்களாக மாற்றத் தவறியமை, மின் உற்பத்தித் திட்டத்திற்கான மூலதனக் கடன் வகைகளில் 87.05 விழுக்காடு உயர்வு, செயல்பாட்டு மூலதன கடன் வகைகளில் 189.88 விழுக்காடு உயர்வு போன்ற காரணங்களால் டான்ஜெட்கோவின் நிலுவைக் கடன்கள் 2019-20 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ₹81,312 கோடியிலிருந்து (செப்டம்பர் 2015) ₹1,23,895.68 கோடியாக அதிகரித்தது.
டான்ஜெட்கோ வங்கிகள்/நிதி நிறுவனங்களுக்கு (FIs) ₹503.28 கோடி அளவிற்கு காலங்கடந்த/அபராத வட்டியை செலுத்தியது.
நடைமுறைப்படுத்துதல்
இத்திட்டத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டிற்குள் சராசரி விநியோக செலவு (ACS) மற்றும் சராசரி வருவாய் (ARR) ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். இவ்விடைவெளி குறைவதற்கு பதிலாக, 2015-16-ல், ஒரு யூனிட்டிற்கு ₹0.60 ஆக இருந்த இடைவெளி 2019-20-ல் ஒரு யூனிட்டுக்கு ₹1.07 ஆக அதிகரித்தது. இதன் காரணமாக 2015-20 காலகட்டத்தில் மொத்த பற்றாக்குறை ₹42,484.70 கோடியாக இருந்தது.
ஜூன் 2012 மற்றும் செப்டம்பர் 2012-க்குள் அனைத்து குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்தும் பணியை முடிக்குமாறு டான்ஜெட்கோவிற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உத்தரவிட்டது. எனினும், டான்ஜெட்கோ, மீட்டர் பொருத்தும் பணியை முடிக்கவில்லை. ஆனால் மேற்கூறிய நுகர்வோர்களுக்கான மானியம் முறையே இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும் HP அடிப்படையில் பெறப்பட்டது, இதனால், ₹1,541.49 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மாநில மின் பளு அனுப்பும் மையத்தால் (SLDC) மின் கொள்முதல் திட்டமிடுவதில் தகுதி அடிப்படையில் முன்னுரிமை என்ற கோட்பாட்டின் படி மின்சாரம் கொள்முதல் (MOD) நடைமுறை சரிவர பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாக, டான்ஜெட்கோ அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் ₹28.45 கோடி, கூடுதல் செலவினமாக அமைந்தது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற விலையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியமயால் டான்ஜெட்கோவிற்கு ₹149.02 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டது.
டான்ஜெட்கோ ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (AT&C) 2.24 முதல் 3.41 விழுக்காடு வரை குறைவாக கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக மத்திய மின்சார அதிகார ஆணையம் (CEA) அறிவித்த கணக்கீட்டு முறையின் படி இழந்த எரிசக்தியின் மதிப்பு ₹6,547.25 கோடியாகும்.
பரிந்துரைகள்
தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ வட்டிச் செலவைக் குறைப்பதற்காக கடன்களை ஆய்வு செய்து மறுசீரமைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TNERC) கட்டண மனுக்களை குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய மின்சார அதிகார ஆணையத்தால் (CEA) பரிந்துரைக்கப்பட்ட முறைமையின் படி ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்புகளை துல்லியமாக கணக்கிடலாம் என்றும் தணிக்கை பரிந்துரைக்கிறது.
டான்ஜெட்கோ, மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புக் குறைப்பை இலக்காகக் கொண்டு, Feeders-களை பிரிக்க செயல் திட்டத்தை வகுக்கலாம்.
1) 31 மார்ச் 2020 அன்றுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை - உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜ்னா (உதய்) திட்டத்தின் முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல் திறன் மீதான செயலாக்கத் தணிக்கை அறிக்கை - தமிழ்நாடு அரசு - அறிக்கை எண் 7- 2021. சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாள்: 10.05.2022.
2) 31 மார்ச் 2020 அன்றுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை - பொது நோக்கு நிதிநிலை அறிக்கை - தமிழ்நாடு அரசு - அறிக்கை எண் 5 - 2021- சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாள்: 10.05.2022.
இந்த அறிக்கை, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் (PSU), நிதி செயல் திறன், இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் மேற்பார்வை பணி, நிறுவன நிர்வாக ஆளுகை மற்றும் நிறுவன சமூகப் பொறுப்புடைமைகளின் கண்ணோட்ட சுருக்கத்தை அளிக்கிறது. தணிக்கையில் கண்டறியப்பட்ட விவரங்கள் பின்வரும் அத்தியாயங்களில் உள்ளடக்கியுள்ளது.
I மாநில பொதுத்துறை நிறுவனங்களின் நிதி செயல்திறன்
இந்த அறிக்கை 62 அரசு நிறுவனங்கள், ஒரு சட்டமுறைக் கழகம் மற்றும் ஒன்பது அரசு கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் அடங்கிய 72 பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கியது. செயலிழந்த/செயல்படாத/கலைப்பு நிலையில் உள்ள ஐந்து பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
மாநில அரசின் முதலீடு
63 அரசு நிறுவனங்கள் மற்றும் கழகங்களின் கணக்குகள், தமிழ்நாடு அரசு `36,877.29 கோடி பங்கு மூலதனத்தில் முதலீடு செய்திருப்பதாக குறிப்பிடுகின்றன மற்றும் நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசு வழங்கிய கடன்கள் `16,903.54 கோடியாக உள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மூலதனத்தில் தமிழ்நாடு அரசின் முதலீடு `3,059.89 கோடி நிகர அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது மற்றும் நிலுவையிலுள்ள கடன் தொகையில் `2,914.70 கோடி குறைந்துள்ளது.
சந்தை மூலதனம்
பட்டியலிடப்பட்ட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு, `615.28 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு `217.27 கோடியாக இருந்தது.
அரசு நிறுவனங்கள் மற்றும் கழகங்களிடமிருந்து வருமானம்
27 அரசு நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் `1,205.56 கோடி இலாபம் ஈட்டியுள்ளன, அதில் `1,011.95 கோடி மூன்று துறைகளிலுள்ள அதாவது எரிசக்தி, தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஐந்து அரசு நிறுவனங்கள் பங்களித்துள்ளன.
14 அரசு நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் `140.91 கோடி ஆதாயப் பங்குத் தொகையை அறிவித்தன.
தமிழக அரசின் உத்தரவின்படி ஆதாயப்பங்குத்தொகையை 17 பொதுத்துறை நிறுவனங்கள் அறிவிக்காததால் `220.65 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.
31 பொதுத்துறை நிறுவனங்கள் `18,629.83 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.
நிகர மதிப்பு/திரண்ட இழப்புகள்
26 அரசு நிறுவனங்கள் `1,41,157.46 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. இவற்றில், 18 நிறுவனங்களின் நிகர மதிப்பு அவற்றின் திரண்ட இழப்பால் முற்றிலும் தேய்ந்து விட்டது. இதன் விளைவாக, இந்த நிறுவனங்களின் மொத்த நிகர மதிப்பு `1,08,863.78 கோடி அளவுக்கு எதிர்மறையாக மாறியது. மூலதனம் தேய்ந்த அனைத்து 18 பொதுத்துறை நிறுவனங்களும் `18,458.17 கோடி இழப்பைப் பதிவு செய்துள்ளன.
அரசு முதலீட்டின் உண்மையான வருவாய் விகிதம்
`3,83,375.28 கோடி புராதன அடக்கவிலை முதலீட்டுடன் ஒப்பிடும்போது, அரசின் முதலீட்டின் தற்போதைய மதிப்பு `1,03,754.62 கோடியாக இருந்தது.
II இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் மேற்பார்வைப் பணி
2019-20 ஆம் ஆண்டில், 77 பொதுத்துறை நிறுவனங்களில் (ஒரு சட்டமுறைக் கழகம் உட்பட), நிதிநிலை அறிக்கைகள் 64 பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து (ஒரு சட்டமுறைக்கழகம் உட்பட) பெறப்பட்டது. பல்வேறு காரணங்களால் 13 பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை நிலுவையில் உள்ளது.
2019-20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் பெறப்பட்ட 64 பொதுத்துறை நிறுவனங்களில், 46 பொதுத்துறை நிறுவனங்களில் கூடுதல் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளின் மீது வெளியிடப்பட்ட குறிப்பிடத்தக்க கருத்துகளின் நிதி தாக்கம் முறையே இலாபத்தில் `1,933.39 கோடியாகவும், சொத்துகள்/கடன்களில் `1,370.57 கோடியாகவும் இருந்தது.
13 நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதில் கணக்கியல் தரநிலைகள்/Ind AS விதிகளை கடைபிடிக்கவில்லை என சட்டமுறை தணிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
III நிறுவன ஆளுகை
பத்து பொதுத்துறை நிறுவனங்கள் கட்டாயத் தேவையான நான்கு இயக்குநர்கள் குழு கூட்டங்களை இந்த ஆண்டில் நடத்தவில்லை.
ஏழு பொதுத்துறை நிறுவனங்களில் சுயாதீன இயக்குநர்களின் பிரதிநிதித்துவம் தேவையான எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது. மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண் இயக்குநர் இல்லை.
19 பொதுத்துறை நிறுவனங்களின் வாரியக் கூட்டங்களிலும், 11 பொதுத்துறை நிறுவனங்களின் வாரியக் குழுக் கூட்டங்களிலும் சில சுயாதீன இயக்குநர்கள் 75 சதவிகிதம் கூட கலந்து கொள்ளவில்லை.
20 பொதுத்துறை நிறுவனங்களில், சுயாதீன இயக்குநர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை, ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், சுயாதீன இயக்குநர்கள் தனிக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.
ஆறு பொதுத்துறை நிறுவனங்களில் தணிக்கைக் குழு அமைக்கப்படவில்லை.
28 பொதுத்துறை நிறுவனங்களில் நியமனம் மற்றும் ஊதியக் குழுஅமைக்கப்படவில்லை மேலும் 15 பொதுத்துறை நிறுவனங்களில் அபாய எச்சரிக்கை முறை (Whistle Blower Mechanism) இல்லை.
IV நிறுவன சமூகப் பொறுப்புடைமை (CSR)
ஒரு பொதுத்துறை நிறுவனம், அதாவது தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் CSR-க்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்தது.
2019-20 ஆம் ஆண்டில் 13 பொதுத்துறை நிறுவனங்கள் CSR நடவடிக்கைகளுக்காக செய்த மொத்த செலவு `12.27 கோடி. அதிகபட்சமாக தொழில் துறை (நான்கு பொதுத்துறை நிறுவனங்கள்) `8.66 கோடி அதிகமாக செலவழித்தது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் அதாவது தமிழ்நாடு சிறுதொழில் கழகம் 2019-20 ஆம் ஆண்டில் CSR செயல்பாட்டிற்காக (`1.37 கோடி) ஒதுக்கப்பட்ட நிதியை வணிக லாபமாக வரவு வைத்தது.
CSR செலவினத்தில் கல்வியை (31 சதவிகிதம்) தொடர்ந்து ஆரோக்கியத்தில் (28 சதவிகிதம்) அதிகபட்ச கவனம் செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu