'மின்கட்டணத்தை உயர்த்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்' - மதுரை ஐகோர்ட்

மின்கட்டணத்தை உயர்த்த விதிக்கப்பட்ட தடை நீக்கம் - மதுரை ஐகோர்ட்
X

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை, மதுரை ஐகோர்ட் நீக்கியது.

Tamil Nadu Electricity Tariff - தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை, மதுரை ஐகோர்ட் நேற்று நீக்கியது.

Tamil Nadu Electricity Tariff -தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த, மின்சார வாரியம் முயற்சித்து வருகிறது. இதுகுறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்வாரியம் பரிந்துரைபடி கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும், என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி சுவாமிநாதன் ஏற்கனவே விசாரித்து, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக, தமிழக மின்வாரியம் சார்பில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் மதுரை ஐகோர்ட் தனி நீதிபதி, மின்கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க தடை உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி உள்ளது. மின்கட்டண அறிவிப்பு வெளியிடும் நேரத்தில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது, பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில், அரசு உள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும், என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், மின்கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு குறித்து எதிர்தரப்பினர் அனைவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த உத்தரவு மூலம் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுப்பதற்கான தடை தற்காலிகமாக நீங்கி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!