தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை: தலைமைச்செயலர் அறிவுரை
Chief Secretary, Collectors, inspect Anganwadi Centres- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா. (கோப்பு படம்).
அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணி குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அரசு தலைமைச் செயலாளர் அறிவுரைகள் வழங்கினார்
17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரு தினங்களில் வடகிழக்கு பருவமழை பருவத்தில் பெய்த அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதிப்பின் அடிப்படையில் நிவாரணத் தொகையாக 6,63,760 குடும்பங்களுக்கு குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.6,000/- நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கவும், 14,31,164 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,000/- வழங்க அரசு ஆணைகள் பெறப்பட்டதன் அடிப்படையில், மேற்கண்ட 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல் ஆணையாளர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.12.2023) முன்னேற்பாடுகள் கூட்டம் நடத்தி இப்பணியினை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் / ஆணையாளர், அரசு முதன்மைச் செயலர் உள்துறை, அரசு முதன்மைச் செயலர் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு செயலர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பணியில் குறைபாடுகள் ஏதுமின்றி உரிய தேதிகளில் கூட்ட நெரிசல் இன்றி அட்டைதாரர்கள் நிவாரணத் தொகை பெறும் வகையில் சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம் 26.12.2023 முதல் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து டோக்கன்கள் அட்டைதாரரின் வீடுகளில் நேரடியாக வழங்கப்பட்டன. 29.12.2023 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர்கள் அக்குறித்த நாட்களில் குறித்த நேரத்தில் குடும்ப அட்டையுடன் நியாயவிலை கடைகளுக்கு வருகை தந்து அவர்களுக்குரிய நிவாரண உதவிகளை பெற்றுச் செல்லலாம்.
மேற்படி நிவாரணத் தொகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில் அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 93424 71314, 97865 66111 எண்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 94864 54714, 1077 எண்களிலும், தென்காசி மாவட்டத்திற்கு 04633-290548, எண்ணிலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 04652-231077 எண்ணிலும், கட்டுப்பாட்டு அறைகள் 26.12.2023 முதல் செயல்பட்டு வருகின்றன.
மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அலுவலகத்தில் 044-28592828 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறை அலுவலக பணி நேரத்தில் செயல்படும். பொதுமக்களுக்கு வெள்ள துயர் துடைக்கும் நோக்குடன் வழங்கப்படும் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிலையில் பொதுமக்கள் இப்பணிக்கு போதுமான ஒத்துழைப்பு நல்கி நிவாரணம் பெற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu