மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 2 டிஎம்சி தண்ணீா் திறப்பு
மேட்டூர் அணை - கோப்புப்படம்
நடப்பு நீா்பாசன ஆண்டில் வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்த காரணத்தாலும்,காவிரி நதிநீா் பற்றாக்குறையாலும் காவிரி டெல்டாமாவட்ட பாசனத்திற்கு மேட்டூா் அணையிலிருந்து ஜுன் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் கடந்த அக்டோபா் மாதம் 10 ஆம் தேதி நிறுத்தப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கள ஆய்வு குழுக்களின் ஆய்வறிக்கை படி,22,774 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்கள் பாசன நீா் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருகும் சம்பா பயிா்களை காப்பாற்ற மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.
இதனையடுத்து சனிக்கிழமை (பிப்.3)மாலை 6 மணி முதல் மேட்டூா் அணையில் இருந்து காவரி டெல்டா பாசனத்திற்கும்,குடிநீா் தேவைக்கும் வினாடிக்கு 6,600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.
மேட்டூா் அணை மின் நிலையம் வழியாகவும், சுரங்க மின் நிலையம் வழியாகவும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் இரு மின் நிலையங்களில் 50 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
செக்கனூா், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல் மேடு, ஊராட்சி கோட்டை உள்ளிட்ட ஏழு கதவணையில் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.
சனிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 70.42 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 107 கன அடியாக உள்ளது.அணையின் நீா் இருப்பு 33.06 டி.எம்.சியாக உள்ளது.
மேட்டூா் அணை வரலாற்றில் வறட்சி காலத்தில் பாசனத்திற்கு மீண்டும் தண்ணீா் திறந்தது இதுவே முதல் முறை என்று நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu