மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறு வாழ்வு: துரை வைகோ எம்பி கோரிக்கை

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறு வாழ்வு: துரை வைகோ எம்பி கோரிக்கை

துரை வைகோ எம்பி.

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறு வாழ்வுக்கு தமிழக அரசு உதவவேண்டும் என்று துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார்.

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பிருமான துரை வைகோ தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்த தேயிலைத் தோட்டத்தை, 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றது.

தேயிலை தோட்டத்தை நடத்தி வரும் தனியார் நிறுவனத்திற்கும் அரசிற்கும் இடையிலான குத்தகை காலம் முடிந்ததும், 2028 ஆம் ஆண்டிற்குள் தமிழக அரசிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதால், இதில் பணியாற்றி வந்த 500 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை இழப்பீட்டுத் தொகையாக கிடைக்கும். ஜூன் 14 ஆம் தேதி கடைசி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.

மாஞ்சோலை பகுதி மக்கள் நலச் சங்க செயலாளரும், மதிமுக சட்டத்துறை செயலாளருமான வழக்கறிஞர் அரசு அமல்ராஜ் தலைமையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் இன்று (19.06.2024) என்னை சந்தித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை நான் செய்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட நான்கைந்து தலைமுறைகளாக மாஞ்சோலை பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினர்களையும் வேரோடு பிடுங்கி அகற்றுவது என்பது வேதனைக்குரிய செயலாகும். வேறு எந்த தொழிலும் தெரியாத அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழக அரசு இவர்களை மனிதாபிமானத்தோடு அணுகி, தேயிலை தோட்ட நிறுவனத்திடம் இருந்து கூடுதல் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவும், அவர்கள் வசிப்பதற்கு போதிய இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும் உடனடியாக உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

19.06.2024

Tags

Next Story