தூத்துக்குடி அனல்மின்நிலைய மின்உற்பத்தி நிறுத்தம்: காரணம் என்ன?

தூத்துக்குடி அனல்மின்நிலைய மின்உற்பத்தி நிறுத்தம்: காரணம் என்ன?
காற்றாலை மின்சார உற்பத்தி தொடங்கி விட்டதால், அனல்மின்நிலைய மின்உற்பத்தியை நிறுத்துமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழ்நாட்டில் கோடைக்காலம் என்பதால் இரவு நேரங்களில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு, ஓரிரு மணிநேரங்கள் மக்கள் துயரப்படும் நிலை நீடிக்கிறது. மேலும், மின் பராமரிப்பு என்ற பெயரிலும் மின்வெட்டு அரங்கேறுகிறது.

நிலக்கரிக்குத் தட்டுப்பாடா?

அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாட்டிற்கு நிலக்கரி தேவையை விட குறைவான அளவு நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருவதாகவும், 4 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாவும் தெரிவித்தார்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் கேட்பதைவிடவும் கூடுதலாக நிலக்கரியை கொடுப்பதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்என குறிப்பிட்டார்.

ஆனாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக அங்குள்ள நான்கு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், நாளொன்றுக்கு 9 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் நான்கு அலகுகளைத் தவிர்த்து மூன்றாவது யூனிட்டில் மட்டுமே 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் என்ன தான் நடக்கிறது?

தூத்துக்குடியில் ஒட்டுமொத்த மின்உற்பத்தி என்பது 1050 மெகாவாட்டாக உள்ளது. அங்குள்ள ஐந்து அலகுகளில் ஒன்றில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு 80,000 டன் நிலக்கரி சேமிப்பில் உள்ளது. நாளொன்றுக்கு 20,000 டன் என்ற அளவில் நிலக்கரியைப் பயன்படுத்தினால் நான்கு நாள்களுக்கு போதுமான அளவுக்கு நிலக்கரி உள்ளது.

மேலும், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் இயங்கி வருகின்றன. அங்கு 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு 840 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்றாலும், 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடக்கிறது.

தூத்துக்குடியில் உற்பத்தியை நிறுத்த என்ன காரணம்?

காற்றாலை மின்சார உற்பத்தி தொடங்கி விட்டதால், அனல்மின்நிலைய மின்உற்பத்தியை நிறுத்துமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் காற்றாலையைப் பொறுத்தவரையில் ஒரு மணிநேரத்துக்கு 750 மெகாவாட் முதல் ஆயிரம் மெகாவாட் வரையில் மின்சாரம் உற்பத்தியாகும்.


நான்கு நாள்களுக்கு ஒருமுறை 60,000 டன் என்ற அளவில் நிலக்கரி வந்தாலும், குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்தால் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. காற்றாலை மின்சாரத்தை யூனிட் ஒன்றை 5 ரூபாய் என்ற விலையில் வாங்குகின்றனர். அதேநேரம், அனல்மின் நிலையங்களின் நிறுவுத் திறனில் 90 சதவீதத்தை இயக்கினால் யூனிட் மின்சாரத்தின் விலை என்பது 6 முதல் 7 ரூபாய் வரையில் வரும்.

எனவே தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஓர் அலகு மட்டுமே இயக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மின்சாரம் மற்றும் நிலக்கரியை வைத்து அரசியல் செய்யாமல் மக்களின் நலன் கருதி சுயமாக மின்சாரத்தை தயாரிப்பதுதான் தீர்வாக இருக்க முடியும்; மின் வாரியத்தையும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்

Tags

Next Story