தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்கு மீண்டும் ஏலம்: மாநில அரசுக்கு அன்புமணி கேள்வி
அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டில் 3 நிலக்கரி சுரங்கங்களுக்கு மீண்டும் ஏலம் அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசின் நிலை என்ன? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொடக்கக்கட்ட பணிகள் முடிந்து ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை இணையவழியில் ஏலம் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆறாம் சுற்றில் இந்த சுரங்கங்கள் ஏலத்தில் எடுக்கப்படாத நிலையில், இப்போது ஏழாம் சுற்று ஏலத்தில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 6 சுற்றுகளில் 87 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் 3 சுரங்கங்களும் இப்போது ஏலத்தில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அவ்வாறு நடந்தால் அது காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த சிக்கலில் தமிழ்நாடு அரசு அதன் கொள்கை நிலைப்பாட்டைக் கூட அறிவிக்காதது ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டையும், உழவர்களையும் காக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 3 நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu