ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து இயங்க அனுமதி
தமிழக அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளை சுட்டிக்காட்டி சில குறைகள் இருப்பதாக கூறிய மத்திய அரசு, மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்வதாக அறிவித்தது .ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பியது.
மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகை பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்து ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவற்றை காரணமாக காட்டி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது
இந்நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரிகள் மூடப்படுவது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது. மருத்துவ கல்லூரிகளில் சிசிடிவி, பயோமெட்ரிக் போன்ற குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர்.
மருத்துவ இடங்களுக்கு பொது கலந்தாய்வு வரைவு மத்திய அரசு அனுப்பியது; இதற்கு, கலந்தாய்வு மாநில உரிமை சார்ந்தது என குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பபட்டது. பொது கலந்தாய்வு இல்லை எனவும் மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பதில் அளித்துள்ளது என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu