பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டு; ரத்து இனி இல்லை

பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டு, இனிமேல் ‘கேன்சல்’ ஆகாது.
Ration Card Latest News -அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் அத்யாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், விநியோகம் செய்கிறது.
ரேஷன் கடைகள் விநியோகம் செய்யும் அத்யாவசியப் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெறுகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் மற்றும் பதுக்கல் தடுப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். சமபந்தப்பட்டவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அத்யாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த 2.09.2022 முதல் 18.09.2022 வரை ஒரு வாரத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக, கடத்த முயன்ற 10 லட்சத்து 27 ஆயிரத்து 440 ரூபாய் மதிப்புள்ள, 1818 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 52 வாகனங்களும் கைப்பற்றபட்டுள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட 184 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடையில், பொருட்கள் வாங்காமல் இருந்தால் கார்டு ரத்து செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டுகள் ரத்து செய்யப்படும் நிலையில், தமிழகத்திலும் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் நிலவிய நிலையில், ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில், ஒரு தரப்பினர் ரேஷன் பொருட்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதால், ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவி கிடைக்காமல் போகிறது; ரேஷன் கார்டு பயன்பாட்டை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதனால் தங்களது ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படலாம் என, தமிழகத்தில் பலரும் அஞ்சிய நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு நிம்மதியை தந்துள்ளது.
பணியிட மாற்றம், உடல்நல பாதிப்பு, திடீரென வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்லுதல், போக்குவரத்து சிரமம், முகவரி மாற்ற நடைமுறை சிக்கல் உள்ளிட்ட சில காரணங்களால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில், சிரமங்கள் ஏற்படுகிறது. மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து, ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால், கார்டு ரத்து செய்யப்பட்டு விடும் என, அச்சம் நீடித்த நிலையில், இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu