அரக்கோணம் அருகே புதிய கால்நடை மருந்தகம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
அரக்கோணம் அருகே கால்நடை மருந்தகத்தை திறந்து வைக்கும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் காந்தி
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில் கால்நடைத்துறை சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடைமருந்தகம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவத்துறை இயக்குநர் ஞாணசேகரன் விளக்கவுரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கைத்தறி துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தீவனங்களை வழங்கினர்
பின்னர் செய்தியாளர்களிடம் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், மத்திய அரசு கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி 90 லட்சம் வழங்க வேண்டும். ஆனால் 20 லட்சம் தான் வழங்கியுள்ளது. அந்த 20 லட்சத்தை வைத்து மாநிலம் முழுவதும் பகிர்ந்தளிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் தற்போது கூடுதலாக 20 லட்சம் வந்துள்ளதாகவும் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் என்றார்.
மேலும் கால்நடைத் துறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் குறைவாக உள்ளது . கடந்த ஆட்சியில் 1450 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 1500 பணியாளர்களை நியமனம் செய்ததில் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது கூறினார்.
மேலும்,நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் அதற்கான பணிகளும் நடந்து வருவதாக அவர் கூறினார். மேலும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விதவைப்பெண்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச ஆடு வழங்கும் திட்டத்திற்கான கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ஆடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
விழாவில் கால்நடை இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன்,மாவட்ட ஊராட்சிதலைவர் ஜெயந்தி,நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேலு ,ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கால்நடைத் துறையினர் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu