ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், நெமிலி பகுதிகளில் அதிக அளவிலான பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதுமான நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என கூறி நெமிலி பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்க மாநில இளைஞர் அணி தலைவர் சுபாஷ் தொடங்கி வைத்து பேசுகையில், டெல்டா மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 300 முதல் 500 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டும் 60 மையங்கள் எப்படி போதுமானவையாக இருக்கும்? எனவே மாவட்ட நிர்வாகம் குறைந்தது 120 முதல் 150 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் துயரை களைய முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் கலந்து கொண்டவர்கள் அரசியல் தலையீடு இன்றி விவசாயிகள் பயன்பெற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகளுக்கே வழங்கவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.
இதனையொட்டி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெமிலி பேருந்து நிலையத்தில் இருந்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர்.
மனுவில், உடனடியாக கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் எனவும், தாமதித்தால் அறுவடை செய்த நெல் மணிகளை தாலுகா அலுவலகத்தில் கொண்டுவந்து குவிப்போம் என கூறியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் மணி, செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu