பிரபல ரவுடி வெட்டிக்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தன்(34) என்கிற பிளேடு நித்தியா. பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர் மீது திருத்தணி, அரக்கோணம், பாணாவரம், ஆர்.கே.பேட்டை, தக்கோலம், சோளிங்கர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அடிக்கடி சிறைக்கு சென்று திரும்பும் நித்தியானந்தன் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க இரு சக்கர வாகனத்தில் பாணாவரம் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக நித்தியானந்தன் வந்துக்கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் நித்தியானந்தன் வாகனத்தின் மீது மோதி அவரை நிலை குலைய செய்தனர். பிறகு காரில் இருந்த இறங்கிய மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் அவரை சரிமாரியாக வெட்டினர்.
இதில் நித்தியானந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் மர்ம நபர்கள் பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பாணாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்தும் பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பிறகு நித்தியானந்தனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது, நித்தியானந்தனின் மனைவி மற்றும் குடும்பத்தார் அங்கு வந்து நித்தியானந்தனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவர்களை அப்புறப்படுத்திய பாணாவரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி கொண்டு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலையாளிகள் யாரென விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணாமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu