விளைநிலங்களில் குப்பைகளை கொட்டும் தனியார் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இராணிப்பேட்டையில் குப்பைகளை பிரித்தெடுக்காமல் விளைநிலங்களில் கொட்டி வரும் தனியார் நிறுவனம்
இராணிப்பேட்டை நகராட்சியின் குப்பைகளை கிடங்கிலிருந்து பிரித்தெடுக்காமல் வயல்களில் கள்ளத்தனமாக கொட்டி வரும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கையை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகளை நகரின் அருகே சீனிவாசன் பேட்டையிலுள்ள குப்பைகிடங்கில் பல ஆண்டு காலமாக கொட்டப்பட்டு வருகிறது. தற்போது குப்பைகள் மலைபோல குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியருகே வசித்து வரும் மக்கள், குப்பைகளிலிருந்து வீசி வரும் துற்நாற்றத்தாலும், கொசுத்தொல்லையால் பெரும் அவதிபட்டு வருவதாகவும் எனவே அவற்றை அப்புறப்படுத்த அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் ,நகராட்சி நிர்வாகம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுத்து மண்ணாக மாறியவற்றை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் கொட்ட திட்டமிட்டது. .அதன் அடிப்படையில் பணிகளை செய்ய சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை பலகோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்து பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.
ஆனால்,நிறுவனம் நகராட்சி அலுவலர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஒப்பந்தத்தை மீறி சட்ட விரோதமாக குப்பைகளை மக்கும் மக்காதவைகளை பிரித்தெடுக்காமல் அப்படியே குப்பைகளை லாரிகளில் கொண்டு போய் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக சுற்று வட்டார கிராம பகுதியான வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தெரி மற்றும் சில கிராமங்களில் உள்ள கவனிப்பாரின்றி கிடக்கும் விவசாய நிலங்கள், கிணறுகள்,மற்றும் பொது இடங்களில் யாரும் பார்க்காத நேரத்தில் கொட்டிவருதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துற்நாற்றம் வீசியும் தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி வருவதாகவும் மேலும், மக்காத குப்பைகளில் நிலத்தடி நீர் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி கிராமமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் .
எனவே, நகராட்சி ஒப்பந்தப்படி கிடங்கில் குப்பைகளில் மக்கும், மக்காதவைகளை பிரித்தெடுத்து முறைபடுத்தி மக்கிய மண்ணை மட்டுமே வெளியேற்ற வேண்டிய பணியை செய்யாமல் சட்ட விரோதமாக இது போன்ற கள்ளத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் மீதும் அதற்கு ஆதரவாக செயல்படும் இராணிப்பேட்டை நகராட்சி அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu