ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி கொள் முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை
ஆற்காட்டில் நடைபெற்ற விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்
ஆற்காட்டில் நடந்த விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் குறுவைசாகுபடி நெல்லை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டுமென மாநில விவசாயிகள் சங்க செயலாளர் உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டம் விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் ஆற்காட்டில் வணிகர் சங்க வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில இளைஞர் செயலாளர் சுபாஷ் தலைமை வகித்தார். கௌரவத்தலைவர் மணி, பொருளாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், அருண் -குமார் மற்றும் நரசிம்மன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவற்றில் பாலாற்றில் 1 கிமீ 1 தடுப்பணை அமைக்க வேண்டும், வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு எளிதாக கடன் வழங்க வேண்டும் என்பது போன்ற 13 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் உதயகுமார், குறுவை நெல் சாகுபடி அறுவடை பணிகள் நடைபெறுவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமெனவும், ஏற்கெனவே, கொள்முதல் செய்த நெல்லுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்குவதோடு, நெல் குவிண்டாலுக்கு 2500, கரும்பு டன்னுக்கு 4000 உயர்த்தி உடனடியாக இந்த பருவத்திலேயே வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், பட்ஜெட் தாக்கலின் போது விவசாயிகளை கலந்தாலோசிக்க குழு அமைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்திற்கு அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம், திமிரி, வாலாஜாப்பேட்டை மற்றும் ஆற்காடு ஒன்றிய, கிராம விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu