அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்- ரெயில்கள் தாமதம்
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்
சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், கோவை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அரக்கோணம் வழியாக செல்வதால், அரக்கோணம் ரெயில் நிலையம் முக்கியமான சந்திப்பாக உள்ளது.
இன்று காலை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதை ரெயில் பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வழியாக வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தண்டவாளம் சரி செய்யப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் தாமதமாக சென்றன. மேலும் தண்டவாள விரிசல் உடனடியாக சரி செய்யப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதும், ரெயில் தடம் புரள்வதும் தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் 6 முறைக்கு மேல் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரெயில் அரக்கோணம் அடுத்த மோசூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் தடம்புரண்டது.
நேற்று மதியம் காட்பாடியில் இருந்து சென்னைக்கு சென்ற சரக்கு ரெயில் அரக்கோணம் சித்தேரி அருகே பசுமாட்டின் மீது மோதி தடம்புரண்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu