இராமநாதபுரம் அருகே 1983ல் கட்டப்பட்ட கிணற்றை தூர்வாரிய ஊராட்சி மன்ற தலைவர்
தூர் வாரப்பட்ட கிணறு.
இராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாரணமங்கலம் ஊராட்சி. ஐந்து குக்கிராமங்களை உள்ளடக்கிய நாரணமங்கலம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இப்பகுதியில் வானம்பார்த்த பூமியாகவே உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நிலத்தடி நீரையே நம்பி இருந்த நிலையில், காவிரி கூட்டம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர். கூலி வேலை பார்த்து பிழைத்து வரும் நிலையில் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து ஏற்பாட்டில் நாரணமங்கலம் கண்மாய் கரையோரத்தில் 1983 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை பராமரிப்பில் கட்டப்பட்ட கிணற்றை தூர்வாரி குடிநீருக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று கிராம மக்கள் உதவியுடன் சுமார் 50 அடி ஆழமுள்ள வட்டக் கிணறை தூர்வாரம் பணியில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்டோர் 10 நாட்கள் தொடர்ந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு கிணற்றை சுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து கிணற்று நீரை பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறைக்கு ஆய்வுக்கு அனுபப்பட்டது. ஆய்வில் தண்ணீரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காவிரி குடிநீருக்காக கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியில் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பஞ்சாயத்து தலைவர் காளிமுத்துவின் முயற்சியால் நாரணமங்கலம் கிராமம் முழுவதும் காலையும், மாலையும் தடையின்றி குடிநீர் கிடைப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பஞ்சாயத்து தலைவர் களிமுத்து கூறுகையில்: கடந்த ஆறு மாதமாக காவிரி குடிநீர் வரவில்லை பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். கண்மாய் கரையோரம் பழமையான கிணற்றை தூர்வாரி தண்ணீருக்கு பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த ஆறு மாதமாக காவிரி குடிநீர் சப்ளை இல்லை. இருந்த போதும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தண்ணீருக்கான மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்து கின்றனர். காவிரி நீரே வராமல் கட்டணம் செலுத்த சொல்வது வேடிக்கையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் இப் பிரச்சனை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu