தொண்டி அருகே மீன் எண்ணைய் ஆலையை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில்
தொண்டி அருகே மீன் எண்ணைய் தயாரிக்கும் ஆலையை மூடக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மச்சூர் கிராமத்தில் பிஸ்மி அக்வாட்டிக் புரோடக்ட்ஸ் என்னும் மீன்களை பதப்படுத்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதிலிருந்து வரும் துர்நாற்றம் இப்பகுதி முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறி, இப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை வட்டாணம் ரோட்டிலிருந்து மச்சூர் வரையிலும் உள்ள கிராம சாலை சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை போடப்பட்டது. இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைந்து வருவதாக கூறி கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சரி செய்வதாக கூறினர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் வட்டாணம் ஊராட்சி அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது.
அதில் ஒரு வருடத்தில் ஆலைக்கு செல்ல மாற்றுப்பாதையை ஆலை நிர்வாகம் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு எவ்வித விளைவுகளும் ஏற்படாதவாறு சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆய்வு செய்யவும் என சமரச பேச்சுவார்த்தை நடத்தபட்டது. கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu