சொந்த செலவில் பாலையாக கிடந்த அரசு பள்ளியை சோலையாக மாற்றிய தலைமையாசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி காந்திநகர் அரசு தொடக்கப்பள்ளியிவ் மரக்கன்றுகளை வளர்த்து சோலைவனமாக்கிய பள்ளி தலைமையாசிரியர் ராஜு.
சிறப்பு செய்தி: தனது சொந்த செலவில் பாலையாக கிடந்த அரசு பள்ளியை சோலையாக மாற்றி அசத்தியிருக்கிறார் தலைமையாசிரியர்.
வறட்சி பகுதியான திருப்பாலைக்குடி காந்திநகரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் தனது சொந்த செலவில் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களை வளர்த்து சோலைவனமாக மாற்றியுள்ளார் தலைமையாசிரியர் .
இராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி காந்திநகர் கடற்கரை கிராமமாகும். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 1937 முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி சுற்றுச்சுவர் இன்றி ஆடு, மாடுகள் உலாவும் இடமாகவும், வகுப்பறைகள் சேதமடைந்த நிலையிலும் இருந்தது. 2014-ம்ஆண்டு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற ராஜு, பள்ளியை சீரமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். முதல் கட்டமாக பள்ளியை சுற்றியுள்ள காலியிடங்களை சமதளமாக்கினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ல் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கினார். இப்பகுதியில் எங்கு தோண்டினாலும் உப்பு தண்ணீராக இருப்பதால், வறட்சி காரணமாக மரக்கன்றுகளை வளர்க்க சிரமப்பட்டார். எனினும் விடா முயற்சியுடன் டிராக்டர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மரக்கன்றுகளை வளர்த்துள்ளார். தொடர்ந்து தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் மரக்கன்றுகள் நட்டு, தற்போது பள்ளியை சோலைவனமாக மாற்றியுள்ளார். இங்கு தற்போது ஆலமரம், அரசமரம், புங்கன், வேம்பு என 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து குறுங்காடு போல் காட்சியளிக்கிறது.
பள்ளி வளாகம் முழுவதும் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் வரையப்பட்டு, அவர்களின் பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன. இப்பள்ளியின் மாணவர்களான முன்னாள் மணிகண்டன் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் அளித்த நன்கொடையால், ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியரின் இம்முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், தனியார் பள்ளிகளில் படித்த தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளித்தலைமையாசிரியர் ராஜு கூறியதாவது: பள்ளியில் தற்போது 224 மாணவிகள் பயில்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 35 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெட்டவெளியாக கிடந்த பள்ளி தற்பொழுது சோலைவனமாக மாறியுள்ளது. 2019-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சியின்போது மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினேன் அதுவே வாடிக்கையாகி தற்போது வரை தனது சொந்த பணத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறேன். வெயிலின் தாக்கத்தில் தகிக்கிம் கன்றுகளும் மரங்களும் தண்ணீர் ஊற்றியவுடன் சிரித்து விளையாடுவது போன்ற ஒரு உணர்வு மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. மேலும் தனக்கு இந்த பள்ளியின் சக ஆசிரியர்கள், முன்னாள் இந்நாள் மாணவர்கள் பக்கபலமாக இருப்பது மன நிறைவைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu