இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியை ஆய்வு செய்தார் கலெக்டர்
இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அரசு பள்ளியில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் திடீர் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 249 பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி 9முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அரசு அனுமதித்தது. இந்நிலையில் 19 மாதங்களுக்கு பின் நவம்பர் 1ம் தேதி முதல் 1முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கப்படும் என அரசு அறிவித்தது. நீண்ட நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பள்ளி வளாகம் தூய்மை படுத்தப்பட்டிருக்க வேண்டும், மின் இணைப்புகளை சரிபார்க்க வேண்டும், கழிப்பறை சுத்தம் செய்து தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பள்ளிகல்வித்துறை ஆய்வு செய்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
பள்ளிக்கு முதல் நாள் வரும் குழந்தைகளை உற்ச்சாகத்துடன் வரவேற்க வேண்டும், அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளதா என்பதை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் ஊராட்சி துவக்கப் பள்ளியில் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.
மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் குழாய் திறந்து பார்த்தபோது தண்ணீர் வரவில்லை. கழிப்பறை கதவுகள் சரியாக இயங்கவில்லை. ஏன் இப்படி பராமரிப்பு இல்லாமல் உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டார். தொடர்ந்து வகுப்பறையில் இருந்த மாணவர்களை சந்தித்தார். அங்கிருந்த துருப்பிடித்த சுத்தம் செய்யப்படாத டேபிளை பார்த்து முகம் சுளித்தார், இதனை கண்ட அலுவலர் உடனடியாக டேபிளை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். வகுப்பறை கரும்பலகையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடத்தப்பட்ட பாடங்கள் அழிக்கப்படாமல் இருந்தது. பள்ளி சுவர்களில் ஊராட்சி தேர்தலில் வாக்குச்சாவடியாக மாற்றப்பட்ட வகுப்பறைகளில் ஒட்டப்பட்ட வேட்பாளர்கள் பெயர் தேர்தல் அறிவிப்பு போஸ்டர்கள் அகற்றப்படாமல் இருந்தது.
மேலும் வகுப்பறையில் குழந்தைகளை தரையில் அமர்ந்திருப்பதை கண்டு ஏன் போதிய இருக்கை வசதிகள் இல்லையா என கேட்டார். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துங்கள். மாணவர்களை தரையில் அமரவைக்க கூடாது என உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu