ராமநாதபுரத்தில் அரசு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் விவகாரம் உயர் அதிகாரி விசாரணை
ராமநாதபுரம் அரசு கல்லூரி விவகாரம் தொடர்பாக மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.
இராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்வராக பணியில் சேர்ந்தார் பால் கிரேஸ். சேர்ந்ததிலிருந்து கல்லூரியில் சாதிய பாகுபாடுகளை பின்பற்றி மாணவர்களையும், பேராசிரியர்களையும் சாதிய ரீதியாகவே நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் அங்கு கல்லூரி அலுவல்கள் சார்பாக பழைய மாணவர்களோ அல்லது தற்போது படிக்கும் மாணவர்களோ முதல்வரை சந்திக்க சென்றால் நேரடியாகவே நீ இந்த சாதியை சார்ந்தவன் என்று கேட்டுவிட்டு, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு உனக்கு இங்கு சான்றிதழ்கள் ஏதும் தர இயலாது, நேரடியாக பல்கலைக்கழகத்தின் இயக்குனரை அணுகும்படி கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இராமநாதபுரம் பகுதிகளில் கல்லூரி முதல்வரை கண்டித்து பெரிய அளவில் வால் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் 752 மாணவ- மாணவிகள் பயிலக்கூடிய உள்கட்டமைப்புகள் இருந்தபோதும்,
இந்த கல்லூரியில் 580 மாணவர்கள் மட்டுமே பயில இயலும் என தவறான தகவலை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, அதற்கான பணியினையும் துவங்கியிருக்கிறார்.
இதனை கண்டித்து பேராசிரியர்கள் 752 மாணவர்கள் படிக்கின்ற இடத்தில் 580 மாணவர்கள் படிக்க வைத்தால் 200 மாணவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று மாணவர் சேர்க்கையை நிறுத்தி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் பொய்யாக காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கிறார் என பேராசிரியர்கள் கடந்த 25ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி முதல்வர் குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதால் இவரை இக்கல்லூரியில் இருந்து மாறுதல் செய்து கல்லூரி இயக்குனர் அலுவலகம் உத்தரவிட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்று, மீண்டும் இக்கல்லூரியில் முதல்வராக பணி அமர்ந்துள்ளார் பால் கிரேஸ்.
இக்கல்லூரியில் ஒவ்வொரு பாடத்திலும் 29-29 என்ற அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். ஆனால் சென்ற ஆண்டை விட 20-20 என்ற அளவில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காமல் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இக்கல்லூரியில் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பட்டியலின மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடைபெறும். இதனை தடுக்கும் விதமாக கல்லூரி முதல்வரின் நடவடிக்கை உள்ளதாக பேராசிரியர்களும், மானவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இந்தக் கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக சிற்றுண்டி நடத்திவரும் பொன்னுத்துரையிடம் இங்கு குறிப்பிட்ட சாதியினர் அதிகம் இருப்பதால் தமக்கு தனி டம்ளரில் டீ கொடுத்து, இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்குமாறு கூறியுள்ளார்.
இரட்டை டம்ளர் முறைக்கு பொன்னுதுரை ஒத்துழைக்காததால் அவர் செய்து வந்த தற்காலிக இரவு காவலர் பணியில் இருந்து நீக்கம் செய்தும், சிற்றுண்டி நடத்துவதற்கு தடையும் போட்டுள்ளார். மேலும் அவருக்கு உண்டான ஊதிய தொகையையும் நிறுத்தி வைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆசிரியர்களை பொருத்தவரையில் அவர்களை ஒருமையில் அழைப்பது, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவது என்று அராஜகமான முறையில் நடந்துகொள்கிறார் எனக்கூறி கடந்த சில தினங்களாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் இன்று இராமநாதபுரம் சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் கூறுகையில்: கல்லூரி முதல்வர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பேராசிரியர்களின் போராட்டங்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ள வந்தேன்.
இரு தரப்பிடமும் விசாரித்துள்ளேன். இதன் முடிவை எங்களுடைய மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பேன். ஏற்கனவே வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மாணவர்களின் நலன் பாதிக்காமல் உரிய நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்.
வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை பொறுத்திருப்போம். நடவடிக்கை எடுக்காத பச்சத்தில், அதன்பின்பு குடும்பமாக வந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கத்திடம் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu