தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து ஊராட்சி மன்றத்தலைவர்
சிறப்பு செய்தி:
இராமநாதபுரம் அருகே தண்ணீருக்காக ஏங்கிய கிராம மக்களுக்கு பக்கத்து ஊராட்சியைச் சேர்ந்த தலைவர் தாகம் தீர்த்ததால் மகிழ்ச்சியில் மக்கள்
இராமநாதபுரம் ஒன்றியம், பாண்டமங்கலம் ஊராட்சியில் சிறுகுடி கிராமம் உள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் கடந்த 5 வருடங்களாக வரவில்லை. சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள ஊருணியில் தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். கோடைகாலத்தால் ஊருணி தண்ணீர் வறண்டு பச்சை நிறமாக மாறி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கிராமத்து பெண்கள் குடங்களுடன் குடிநீருக்காக பல இடங்களுக்கு தினமும் அலைந்தனர். காவிரி குடிநீருக்குகாக 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டி காட்சிப்பொருளாக இருப்பது கண்டு வேதனையடைந்தனர். ஊராட்சிமன்றத் தலைவர் சித்ராதேவிகருப்பையா, அதிகாரிகள் யாரும் தண்ணீர் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், அருகில் 3 கி.மீ. தொலைவில் உள்ள நாரணமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ள காளிமுத்தனிடம் குடிநீர் பிரச்னை குறித்து முறையிட்டுள்ளனர். வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் காளிமுத்தன் நாரணமங்கலம் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கிராமத்தில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஊருணி கரையில் தோண்டபட்ட கிராம பொதுக் கிணற்றை ஊர்மக்கள் உதவியுடன் தூர் வாரியுள்ளார். கிணற்றிலிருந்து பம்பு செட் மூலம் காவிரி கூட்டு குடிநீருக்காக கட்டப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டி வரை குழாய் அமைத்து தண்ணீரை கிராம மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். தண்ணீர் பிரச்னை இல்லாத கிராமமாக மாற்றியுள்ளார்.
அந்த கிராமத்தின் தண்ணீர் பஞ்சம் நீங்கியதை பார்த்த சிறுகுடி கிராம மக்கள், நாரணமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்தனை நேரில் சந்தித்து, தங்களுடைய கிராமத்தில் குடிநீருக்காக படும் சிரத்தை எடுத்துரைத்ததோடு தங்களுக்கும் தண்ணீர் வழங்க உதவுமாறு கேட்டுள்ளனர். இது தன்னுடைய ஊராட்சிக்குள்பட்ட சம்பந்தப்பட்ட கிராம மக்களை கேட்டுத்தான் முடிவு சொல்லவேண்டுமென கூறியுள்ளார்.
நல்ல முடிவு வருமென காத்திருந்த மக்களுக்கு மழை போல வந்தது அந்த குளிர்ந்த செய்தி வேலாங்குளம் கிராமத்தில் எடுக்கும் தண்ணீரை சிறுகுடிக்கும் வழங்க ஊராட்சிமன்றத் தலைவரிடம் வேலாங்குளம் மக்கள் சம்மதம் தெரிவிக்கவே, சற்றும் தாமதமின்றி ஊருணியிலிருந்து சிறுகுடி கிராம நீர் தேக்க தொட்டி வரை குழாய் அமைக்கப்பட்டு, அங்கு ஏற்கெனவே இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீரை நாரணமங்கலம் பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து திறந்து வைத்தார். தினசரி 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சிறுகுடி மக்களுக்கு இதன் மூலம் கிடைக்கின்றது.
இது குறித்து, சிறுகுடி கிராமத்து பெண் ரேணுகா கூறுகையில்: எங்கள் கிராமத்தில் காவிரி குடிநீர் தொட்டி கட்டப்பட்டு ஒரு நாள் கூட தண்ணீர் வரவில்லை. தினமும் 5 கிமீ தொலைவுக்கு நடந்து சென்று ஊருணி தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தோம். கருவேலங்காட்டு பகுதியை தினமும் அச்சத்துடனே கடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தோம். ஊருணி வறண்டு விட்டதால் பயன்படுத்த முடியவில்லை. வேலாங்குளம் கிராமத் தலைவரின் முயற்சியால் எங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.
எங்கள் கிராமத்தில் வீட்டின் அருகிலேயே குழாயில் தண்ணீர் வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.ஊராச்சித் தலைவர் காளிமுத்தன் கூறுகையில்: தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற நிலையில் நாரணமங்கலம் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. கிராமத்திற்கு காவிரி குடிநீர் கிடைத்திட பல முயற்சி எடுத்தும் தண்ணீர் கிடைக்க வில்லை. பல ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஊருணி கரையில் உள்ள பொது கிணற்றை பொதுமக்கள் உதவியுடன் தூர்வாரினோம்.
ஊற்று நன்றாக இருந்ததால் கிராமத்தில் உள்ள தண்ணீர் தேக்க தொட்டிக்கு குழாய் அமைத்து பம்பு செட் மூலம் தண்ணீர் சப்ளை செய்தோம். கிராமத்தில் பள்ளிக்கூடம், அங்கன்வாடி, கழிப்பறை பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ள நிலையில் அருகில் உள்ள நாரணமங்கலம் கிராமத்திற்கு தண்ணீர் சப்ளை செய்கின்றோம். பாண்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சிறுகுடி கிராமத்தில் மக்கள் குடிநீர் தேவை என கேட்டுக்கொண்டனர்.
6 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். வேலாங்குளம் கிராம மக்களின் ஒத்துழைப்போடு பல ஆண்டுகளாக தண்ணீருக்காக கஷ்டப்படும் சிறுகுடி கிராமத்திற்கு ரூ.20ஆயிரம் செலவில் குழாய் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்துள்ளோம். வயல் வெளி பகுதியில் உள்ள ஊரணி கிணறு மின்சாரம் இல்லாத நிலையில் பம்புசெட் மூலம் தண்ணீர் விநியோகம் செய்தோம்.
தினமும் 5மணி நேரத்திற்கு பம்புசெட் இயக்கப்படுவதால் மாதம் டீசல் செலவு ரூ.15ஆயிரத்திற்கு மேல் ஆனது. தற்போது கிராமத்திலிருந்து ஊரணி வரை தனியாக 6 மின் கம்பங்கள் அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊருணியில் தண்ணீர் உள்ள வரை கிணற்றில் தண்ணீர் வற்றாது. இந்நிலையில் அருகில் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஊருணியிலிருந்து தண்ணீர் கிடைக்க குழாய் அமைத்துள்ளோம் என்றார்.
மூன்றாம் உலகப்போர் ஒன்று வந்தால் அது தண்ணீர்தான் காரணமாக இருக்கும் என்றகருத்து நிலவிவருகிறது. அதற்கா பல உதாரணங்களைப் பார்த்து வருகிறோம். அனுபவித்தும் வருகிறோம். உள்ளூரில் குழாயடிச்சண்டை தொடங்கி அண்டை மாநிலங்கள், மாவட்டங்கள், பக்கத்து ஊர் என தண்ணீர் பிரச்னைக்காக பிளவு பட்டிருக்கும் சூழல் ஒருபுறம் நீடிக்கிறது.
ஆனால் மறுபுறம், பல ஆண்டுகளாக தண்ணீருக்காக கஷ்டப்பட்டு குடிநீருக்காக ஏங்கிய கிராம மக்களின் தாகத்தை தீர்க்கும் நற்செயலை மக்கள் சம்மதத்துடன் நிறைவேற்றிக்கொடுத்த ஊராட்சித்தலைவர் காளிமுத்தனை சிறுகுடி மக்கள் நன்றி பாராட்டுகின்றனர். இந்த நல்வினை திக்கெட்டும் பரவட்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu