கொரோனா விழிப்புணர்வு: 197 நாடுகளின் கொடியுடன் ராணுவ வீரர் நடை பயணம்
197 நாடுகளின் கொடியுடன் கொரோனா விழிப்புணர்வு நடை பயணம் செய்யும் ராணுவ வீரர் பாலமுருகன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் பாலமுருகன்33, திருமணமாகி 8 வயதில் ஆண், 4 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது அசாம் மாநில ராணுவ பிரிவில் மணிப்பூரில் பணியாற்றி வருகிறார். 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த 197 நாடுகளின் தேசிய கொடிகளுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், தாய், தந்தையரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உரிய கல்வி கிடைப்பதற்காகவும், கொரோனா காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காக்க உழைத்திட்ட அனைத்து நாட்டு பிரதமர்கள், முதலமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ராணுவத்தினர், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் என அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக பாலமுருகன் தெரிவித்தார். ராமேஸ்வரம் தீவில் பாம்பன் பாலத்திலிருந்து அயோத்தி வரை சுமார் இரண்டாயிரத்து 800 கி.மீ., நடை பயணமாக செல்ல உள்ளார்.
இன்று காலை ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திலிருந்து தொடங்கிய கொரோனா விழிப்புணர்வு நடைபயணம் தினமும் சராசரியாக 30 கி.மீ., தூரம் வரை செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வழி நெடுங்கிலும் முன்னாள், இன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் ஆதரவளிப்பதாக கூறினார். 197 நாடுகளின் கொடிகள் பொருத்தப்பட்டுள்ள தள்ளுவண்டியில் கொரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அணையா விளக்கு ஏற்றபட்டுள்ளது. மனித இனத்தை காக்க கோவிட் தடுப்பூசி அவசியம், மேலும் கொரோனாவிலிருந்து விடுபட உடற்பயிற்சி சத்தான உணவு அவசியம், பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த இந்த நேரத்தில் அனைத்து நாடுகளும் நல்லூறவுடன் இணைந்து மனித இனத்தை காக்க கொரோனாவை ஒழிக்க நிரந்தர மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றார். இன்று காலை புதிய பேரூந்து நிலையம் அருகே வந்த ராணுவ வீரர் பாலமுருகனை சமூக ஆர்வலரும், ஆட்டோ ஓட்டுனருமான சாகுல்ஹமீது சந்தித்தார். ராணுவ வீரரின் விழிப்புணர்வு பயணம் வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்தி மரக்கன்றுகளை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu