அரசு பேருந்து மோதி பெண் பலி- உறவினர்கள் சாலை மறியல்

அரசு பேருந்து மோதி பெண் பலி- உறவினர்கள் சாலை மறியல்
X

தொண்டி அருகே சாலை விபத்தில் பெண் பலியானார். இதில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கூடலூர் அருகே உள்ள வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் என்பவரது மகன் முத்தையா. சம்பவத்தன்று முத்தையாவும் அவரது மனைவி மாரிகண்ணும் தொண்டி அருகே உள்ள நம்புதாளையிலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பும் போது தொண்டி மின் வாரிய அலுவலகம் அருகே சாலையில் மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் பைக் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று மோதியதில் நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி மாரிக்கண்ணு பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறாய்வுக்காக திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து ஓட்டுனரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பதட்டம் நிலவியது.

இதனையடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரை விரைவாக கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். தகவல் அறிந்து திருவாடனை மருத்துவமனைக்கு வந்த திருவாடனை நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் மற்றும் திருவாடனை தொகுதி அமமுக வேட்பாளர் ஆனந்த் இறந்தவரின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை எஸ்.பி.பட்டிணம் அருகே போலீஸார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் இராமநாதபுரத்தில் இருந்து தொண்டி, மீமிசல் வழியாக திருச்சி செல்லும் அரசு பேருந்து என்பதும் அதனை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் ராமச்சந்திரனை கைது செய்து தொண்டி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!