இராமநாதபுரம் மருத்துவமனையிலிருந்து தப்பிய போக்சோ கைதி: 2 போலீசார் மாற்றம்
போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட ஆறுமுகம்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கரையூர் பகுதியை சேர்ந்தவர் ஏர்வாடி என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 42). இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை பணங்கொட்டை எடுத்து வரலாம் என்று கூறி அழைத்துச் சென்றவர் வீட்டுக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டபிரிவில் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில் காலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கலாம் என்று உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர்.
மேற்கண்ட ஆறுமுகத்தை ராமேஸ்வரம் நகர் போலீஸ் காவலர் நவநீதகிருஷ்ணன் மற்றும் ஜெட்டி போலீஸ் காவலர் பேட்ரிக் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்து கண்காணித்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து ஆறுமுகம் தப்பித்து விட்டார்.
அவர் அங்கிருந்து வெளியேறி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது மேற்கண்ட பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீசார் லத்திகா மற்றும் அருணா ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். அப்போது சிறுமி மற்றும் அவரின் தாய் ஆகியோர் மேற்கண்ட ஆறுமுகம் சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்து பெண் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இதனை கண்டு பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த குற்றவாளி இங்கு வெளியில் நிற்பது எப்படி என்று அதிர்ச்சி அடைந்து உடனடியாக சென்று ஆறுமுகத்தை மடக்கிப்பிடித்தனர். அவரை கையும் களவுமாக பிடித்து சென்று அரசு ஆஸ்பத்திரியில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் குற்றத்தில் கைதாகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியை தப்ப விட்டதற்காக அப்போது பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் நவநீதன் மற்றும் பேட்டரிக் ஆகியோரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu