நரிக்குறவர் இன மக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார்
நரிக்குறவர் இன மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழநாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நலவாரியம் அமைத்து அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நரிக்குறவர் இன மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அடிப்படை அடையாள ஆவண அட்டைகள் மற்றும் பட்டா ஆணை கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கிட வேண்டும் எனவும், சிறு தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்கிடவும் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல, திருவாடானை சமத்துவபுரம் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் மேற்குறிப்பிட்ட 3 கோரிக்கைகளோடு, தங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தரவும் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், உடனடியாக அப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
தகுதியான நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள பெண்களை குழுக்களாக ஒருங்கிணைத்து சிறுதொழில் பயிற்சி வழங்கிடவும், அதன் மூலம் அரசுத் திட்டங்களின் கீழ் மகளிர் குழுக்களுக்கான கடனுதவி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மகளிர் திட்ட இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
குடியிருப்புகளை பொறுத்த வரையில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம், மாநில அரசின் பசுமை வீடுகள் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் இப்பகுதிகளில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், திருவாடானை சமத்துவபுரம் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன பயனாளிககள் மூன்று பேருக்கு மாதாந்திர உதவித் தொகை தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu