படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்பாட்டம்

படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.

தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஷ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

இலங்கை வசமுள்ள பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீன் விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை எதிர்த்து இராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் வெளிநாட்டு மீன்பிடிதடை சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்கி யாழ்ப்பாண மாவட்டம் காங்கேசன்துறை, காரை நகர், கிளாஞ்சி, மயிலட்டி மற்றும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், படகுகளை ஏலம் விட கடந்த 2020ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் அடிப்படையில் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்ட்டுள்ள நல்ல நிலையில் உள்ள படகுகளை மீண்டும் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கும்மாறு கேட்டுக்கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், தமிழக மீனவர்களால் இலங்கை சென்று படகுகளை மீட்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே தமிழக படகுகளை உடனடியாக ஏலம் விட்டு அந்த பணத்தை விசைப்படகு உரிமையாளர் ஒப்படைக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை கடற்படை தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தமிழக அரசு இழப்பீடு வழங்கியது. இதனையடுத்து இலங்கை அரசு இன்று முதல் வரும் 10ந்தேதி வரை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை ஏலம் விடப்போவதாக கடந்த மாதம் இலங்கை மீன் வளத்துறையினரால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கடட் போராட்டங்களை நடத்தி வந்தனர். உடனடியாக அரசு அதிகாரிகள் மீனவர்களை அழைத்து இலங்கை அரசு ஏலம் விடுவதை கைவிட்டுவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மீனவர்கள் தங்களது போராட்டங்களை வாபஸ் பெற்றனர்.

தமிழக மீனவர்கள் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு இன்று காலை முதல் மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகளை ஏலம் மிட்டு வருகிறது. இதனை கண்டித்து இன்று இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையை இலங்கை அரசு கைவிட தவறும் பட்சத்தில் வரும் வெள்ளிக்கிழமை மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளையும், இலங்கை அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!