தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள் - நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள் - நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்
X

ராமநாதபுரம் ஆய்வுக்கூட்டம் 

தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள். நகராட்சி அலுவலக ஆய்வு கூட்டத்தில் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.

இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுடன் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி பகுதிகளில் பன்றிகளை பிடிக்கும் போது பணியாளர்கள் தாக்கப்பட்டதாகவும், காவல்நிலையம் வரை செல்லும் நிலை ஏற்பட்டதாக சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார். அது குறித்து எம்எல்ஏ பேசுகையில் அடிதடி, போலீஸ் பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள் என்றார்.

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.பொறியாளர் நிலேஸ்வர் முன்னிலை வகித்தார். நகராட்சியில் சுகாதாரம், வருவாய், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எம்எல்ஏ பேசும் போது, கொரோனா தொற்று பரவி வரும் இக்கட்டான கால கட்டத்தில் பணியாற்றி வருகிறோம். முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. தொற்று ஏற்படுவது தெரியாமலே உள்ளது. முதல் அலையில் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறி தெரிந்தது. இரண்டாவது அலையில் திடீரென கொரோனா தாக்குதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. மற்ற மாவட்டங்களை விட நம் மாவட்டத்தில் தொற்று குறைவாக உள்ளது. இருந்தாலும் நம் முன்னெச்சரிக்கயைாக இருக்க வேண்டும்.

நகராட்சிக்கு முக்கியமான மூன்று கடமைகள் உள்ளது. சுகாதாரம், மின்சாரம், குடிநீர் இவை சரியாக இருந்தால் தான் மக்களிடத்தில் நம்பிக்கையை பெற முடியும். அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்ட போது தூய்மை பணிகளில் தொய்வு இருந்தது. தினமும் அப்பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு சரியாக எரியவில்லை என புகார்கள் வந்துள்ளது. நானும் இரவு நேரங்களில் இராமநாதபுரம் வரும் போது முக்கியமான சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. நகராட்சியில் பல இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நிதியிலிருந்து ஏராளமான தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளது.

தெருவிளக்குகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவேரி குடிநீர் வரவில்லை என தெரிவித்தனர். நகராட்சி ஆணையரிடம் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கும் படி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து பல தெருக்களில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இராமநாதபுரம் நகருக்கு பொட்டிதட்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகில் வேறு இடங்களில் தண்ணீர் எடுப்பதற்காகன வாய்ப்புகள் இருந்தால் அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து தாருங்கள் சம்பந்தபட்ட துறை அமைச்சர், முதல்வரிடத்தில் தெரிவித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கபடும். காரில் செல்லும் போது சாலையின் குறுக்கே பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. அரசு மருத்துவ மனை சாலையில் பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது.

அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோன காலத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். தமிழக முதல்வர் சார்பிலும், சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும். உங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர் என்றார். முன்னதாக சுகாதார ஆய்வாளர் ஸ்டாலினி குமார் பேசுகையில், அரசு மருத்துவ மனையில் தூய்மை பணிக்கு தனியாக பணியாளர்கள் உள்ளனர். பன்றிகளை இரண்டு முறை பிடித்துள்ளோம். பன்றி உரிமையாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அடிதடி ஏற்பட்டு காவல் நிலையம் வரை செல்லும் நிலை ஏற்பட்டது. என்றார்.

இதற்கு பதிலளித்த எம்எல்ஏ, மக்கள் பணியாற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராது பொது நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். உன் ஏரியா, என் ஏரியா என பிரித்து பார்க்க கூடாது. கொரோனா வார்டில் உள்ளே சென்று நோயாளிகளின் பிரச்சனைகளை கேட்டு வந்துள்ளேன். நீங்கள் பணி செய்யும் போது அடிதடி போலீஸ் பிரச்சனைகள் ஏற்பட்டால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். திமுக நகர் செயலாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம், மற்றும் நகர் திமுக நிர்வாகிகள், நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!