காவல் நிலையத்தில் வாலிபர் உயிரிழந்த வழக்கு: காவலர்கள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
பரமக்குடி அருகே எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் வாலிபர் உயிரிழந்த வழக்கு. காவலர்கள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்.
மதுரையை சேர்ந்தவர் ராமானுஜன். இவரது மகன் வெங்கடேசன், 26. ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக 2012 அக்டோபர் 2 ஆம் தேதி, எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர், காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு சார்பு-ஆய்வாளர் முனியசாமி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியசாமி, முதுகுளத்தூர் அருகே ஏனாதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார் . இவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ராமநாதபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முனியசாமிக்கு ராமநாதபுரம் ஜேஎம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உடல் நலக்குறைவால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முனியசாமி கடந்த ஜூலை மாதம் இறந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக காவலர் ஞானசேகரன், தனிப்பிரிவு காவலர்கள் கிருஷ்ணவேல், கோதண்டராமன் ஆகியோரை சிபி சிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த காவலர்கள் ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆகியோர், ராமநாதபுரம் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி சிட்டிபாபு முன்னிலையில் இன்று சரணடைந்தனர். இருவரையும் டிசம்பர் 27 ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கோதண்டராமனை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu