ஓடும் பேருந்தில் ரவுடிகளுக்கு அரிவாள் வெட்டு: பரமக்குடியில் பயங்கரம்
பரமக்குடியில் அரிவாள் வெட்டில் காயமடைந்த ரவுடிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரமக்குடியில் ஓடும் பேருந்தில் ரவுடிகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரியமங்கலம் என்ற இடத்தில் 2019 ல் மணிகண்டன் என்பவர் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் 21, வழிவிட்டான் 18, அழகு முருகன் 18, முத்துமுருகன் 19 ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்த நான்கு பேர் மற்றும் பழனிமுருகனின் தந்தை தர்மலிங்கம் என ஐந்து நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேரில் சென்று ஆஜராகி கையெழுத்து இட சென்றுள்ளனர். மீண்டும் இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்தை தவமணி என்பவர் ஓட்டியுள்ளார். நடத்துனராக சக்திவேல் என்பவர் பணியில் இருந்துள்ளார். பேருந்தில் சுமார் 45 பயணிகள் பயணித்துள்ளனர்.
பேருந்து பரமக்குடி அடுத்த தெளிசாத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இருவர் பேருந்தை மறித்து உள்ளனர். ஆனால் ஓட்டுநர் நிற்காமல் சென்று விட்டார். தொடர்ந்து கார், டூவிலர்களில் பின்தொடர்ந்த பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் கமுதக்குடி என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்து பேருந்தினுள் ஏறி நால்வரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பழனிக்குமார், அழகு முருகன், வழிவிட்டான் ஆகிய மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடி உள்ளனர்.
காயமடைந்த நால்வரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் விசாரணை செய்தார். பரமக்குடியில் பட்டப்பகலில் ஓடும் பேருந்தை வழிமறித்து ரவுடிகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu