பரமக்குடியில் கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் 8 குற்றவாளிகள் கைது
பரமக்குடியில் தொடர் கொள்ளை தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த வாரம் 2 தொடர் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த கொள்ளை சம்பவம் நகரின் முக்கியமான பஸ் நிலையம் அருகில் நடந்தது போலீசுக்கு சவால் விடுவதாக அமைந்தது. இந்த கொள்ளையில் பங்குபெற்ற கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆணையின்படி, பரமக்குடி டி.எஸ்.பி. வேல்முருகன், பயிற்சி டி.எஸ்.பி. நிரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் தடயமாக ஒரு இரு சக்கர வாகனத்தின் பின் சக்கரம் மட்டுமே சி.சி.டி.வி.யில் தெரிந்தது. அதை வைத்து புலன் விசாரணை செய்து 48 மணி நேரத்தில், இதில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அவர்களிடம் செய்த விசாரணையில், 5 ஆடுகள் திருடியது, 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த ஐந்து ஆடுகளையும் இரண்டு கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இதில் பரமக்குடி அருகே உள்ள முத்துராமலிங்கப்பட்டி கோபிநாத், கார்த்திக், ராஜா, கீரந்தை ரமேஷ், ஆலங்குளம் சார்லி, தெளிசாத்தநல்லூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட திண்டுக்கல்லை சேர்ந்த அஜித் குமார், துரைமுருகன், விஜய் ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீஸ் வாகன தணிக்கையில் தப்பிக்க எண்ணி சாலை விபத்தில் சிக்கினர். மனிதாபிமான அடிப்படையில் போலீசார் இவர்களை பரமக்குடி மருத்துவமனையில் அனுமதித்து அஜித்குமார் மற்றும் துரைமுருகன் ஆகிய இருவருக்கும் கால் மற்றும் கைகளில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர் . பின்னர் பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சம்பவம் நடந்த 48 மணிநேரத்திற்குள் 8 குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த துணை காவல் கண்காணிப்பாளர் நிரேஷ் தலைமையிலான குழுவிற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிசு அளித்து பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu