இராமேஸ்வரம்-மதுரை மீண்டும் ரயில் சேவை தொடங்க இராமநாதபுரம் மாவட்ட மக்கள், வணிகர்கள் கோரிக்கை
ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட இராமேஸ்வரம்-மதுரை ரயில் சேவையை சாதாரண மக்கள் அதிக செலவு செய்து மதுரைக்கு சென்று திரும்பும் சிரமத்தை உணர்ந்து மீண்டும் தொடங்க வேண்டுமென இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக, இராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டு ஓராண்டைக் கடந்துவிட்டது. பேருந்துகளில் கூடுதல் செலவு செய்து, பயணம் மேற்கொள்ள வேண்டிய, சிரம நிலையக் கருத்தில் கொண்டு, மீண்டும் ரயில் சேவையை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
கல்வி, வேலை, மருத்துவம், பொருட்கள் கொள்முதல் என அனைத்து வகையிலும், இராமநாதபுரம் மாவட்ட மக்கள் மதுரையைத்தான் சார்ந்துள்ளனர். இதற்கு, இராமநாதபுரம்-மதுரை இடையேயான பஸ், ரயில் சேவை பயன்பட்டு வந்தது. கடந்த 2020 மார்ச் 25 கொரோனா முழு ஊரடங்கிற்கு முன்பு வரை இராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு காலை 5:30, 11:20, மாலை 6:00 மணிக்கும், மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு காலை 6:50, மதியம் 12:40, மாலை 6:10க்கும் ரயில்கள் இயக்கப்பட்டன.
பேருந்தில் செல்ல இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரூ.100 வசூலிக்கப்படும் நிலையில், ரயிலில் ரூ.20 கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.இதனால் ரயில் சேவையை இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த ரயிலில் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்துகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
ஆனால், ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட இராமேஸ்வரம்-மதுரை ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் சாதாரண மக்கள் அதிக செலவு செய்து, வாடகை வாகனங்களில் மதுரைக்கு சென்று திரும்பும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, இராமேஸ்வரம்-மதுரை இடையே பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டுமென அனைத்துதரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu