இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் இதுவரை 556.22 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 48.22 மி.மீ கூடுதலாகும். வேளாண் பயிர்கள் 1,34,080 எக்டர் பரப்பிலும், தோட்டக்கலைப் பயிர்கள் 1,057 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மாவட்டத்தில் 77 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு 200 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டமானது பரமக்குடி, கமுதி, ஆர்எஸ்மங்கலம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் விற்பனை குழுவின் அறிக்கையிடப்பட்ட விளைபொருட்களில் இத்திட்டத்தின் கீழ் மிளகாய், பருத்தி, நெல், நிலக்கடலை மற்றும் தானியங்கள் மூலம் 21,734 குவிண்டால் வரத்து வரப்பட்டுள்ளது. பரிவர்த்தனை செய்யப்பட்ட விளைபொருட்கள் மொத்த மதிப்பு ரூ. 7 கோடியே 74 லட்சத்து 35 ஆயிரத்து 645. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 517 விவசாயிகள் மற்றும் 66 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 5645 விவசாயிகள் மற்றும் 113 வியாபாரிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி விவசாயிக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவுத்துறை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக இதுவரை 591 விவசாயிகளுக்கு ரூ.352.32 லட்சம் மதிப்பில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் டாம் சைலஸ், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu