தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் உலா

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் உலா
X

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்.

இராமநாதபுரம் அருகே சீசன் முடிந்த நிலையிலும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் உலா வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே மேலச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, மற்றும் நயினார்கோவில் அருகே தேர்த்தங்கல் ஆகிய 4 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அதுபோல் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவது வழக்கம்.
பின்னர் இந்த பறவைகள் மீண்டும் மார்ச் மாதம் திரும்பி சென்று விடும். அதுபோல் இந்த ஆண்டு மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகிய 3 பறவைகள் சரணாலயங்களிலும் குறைவான அளவிலேயே பறவைகள் வந்து இருந்தன. ஆனால் இராமநாதபுரம்-நயினார்கோவில் செல்லும் சாலையில் உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு அதிகமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.
இந்த நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு சீசன் முடிவடைந்த நிலையிலும் இன்னும் அதிகமான பறவைகள் திரும்பிச் செல்லாமல் சரணாலயத்தில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகளுடன் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக செங்கால் நாரை மற்றும் கூழைக்கடா பறவைகள் அதிக அளவில் உள்ளன. இதை தவிர சாம்பல் நிற நாரை, நீர்க்காகம் ஏராளமான கொக்குகள் கருப்பு மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது: தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு மட்டும் இனப்பெருக்கத்திற்காக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன. இதில் இதுவரையிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளுடன் திரும்பி சென்று விட்டன.

சீசன் முடிந்த நிலையிலும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் நீர்நிலையில் அதிக அளவில் தண்ணீர் அதிகமாக இருந்து வருவதால் சீசன் முடிந்த நிலையிலும் தற்போது வரையிலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. பறவைகளை வேட்டையாடுவதை தடுக்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் என தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!