இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வரும் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை மற்றும் அக்டோபர் மாதம் 28,29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் முத்துராமலிங்கர் தேவர் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது.
இதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலும் இராமநாதபுரம் எஸ்பி. கார்த்திக் 144 தடை உத்தரவு பிறப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலாக்கு பரிந்துரை செய்தார்.
இத்தனையடுத்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றுமுதல் 2 மாதங்களுக்கு, 144 தடை உத்தரவை, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா பிறப்பித்தார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில், நாளை 9ம் தேதி முதல், 15ம் தேதி வரையிலும், அக்டோபர் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், வெளி மாவட்டங்களில் இருந்து குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி, இவ்விரு நிகழ்வுகள் நடந்தன. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதோ, அனுமதியின்றி பேரணி, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவோ கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று கூட்டங்கள் போன்றவை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu