ஆயுதங்களை காட்டி பெட்ரோல் பங்கில் ரு.1.70 லட்சம் காெள்ளை: மர்ம நபர்கள் துணிகரம்

ஆயுதங்களை காட்டி பெட்ரோல் பங்கில் ரு.1.70 லட்சம் காெள்ளை: மர்ம நபர்கள் துணிகரம்
X

இராமநாதபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் பணம் கொள்ளை.

பெட்ரோல் பங்க் ஊழியர்களை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வண்ணாந்தரவை மின்துறை அலுவலகம் அருகில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பங்கில் பகல் நேரத்தில் 4 ஊழியர்களும், இரவு நேரத்தில் 3 ஊழியர்களும் பணியில் இருப்பார்கள். நேற்று இரவு 11 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ஊழியர்கள் ராஜா, வசந்த் மற்றும் கேஷியர் கருணை ஆகிய 3 பேர் பணியில் இருந்துள்ளனர். இரவு நேரத்தில் குறைந்த அளவே வாகனங்கள் பெட்ரோல் போட வரும் என்பதால், ஊழியர்கள் மூவரும் பெட்ரோல் பங்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் அமர்ந்து இருந்த நபர்கள் முகமூடி அணிந்தும் இருந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த இருவர் திடீரென இறங்கிச்சென்று, பயங்கர ஆயுதங்களை காட்டி பெட்ரோல் பங்க் ஊரியர்களை மிரட்டி தாக்க தொடங்கினர். அதே நேரத்தில் வாகனத்தில் அமர்ந்திருந்த நபர்கள் கீழே இறங்கி, பெட்ரோல் பங்க் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து வேக, வேகமாக ஒரு பையில் போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

மர்ம நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜா மற்றும் வசந்த் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக கேஷியர் கருணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் மற்றும் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கேமராவில் ஒரு இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததும், இவர்களில் 2 பேர் முகமூடி அணிந்து இருந்ததும், ஒருவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததும் தெரியவந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்நிலையில் மர்ம நபர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அந்த பெட்ரோல் பங்க் அருகே உள்ள மோர்குளம் என்ற இடத்தில் நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!