இலங்கைக்கு கடத்தலில் ஈடுபட முயன்றவர்கள் கைது- மெரைன் போலீசார் நடவடிக்கை

இலங்கைக்கு கடத்தலில் ஈடுபட முயன்றவர்கள் கைது- மெரைன் போலீசார் நடவடிக்கை
X
இலங்கைக்கு கடத்த முயன்ற 17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேரை கைது செய்து மெரைன் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்ட சுறா இறக்கை, ஏலக்காய், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த மெரைன் போலீசார் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.
இராமேஸ்வரத்திற்கு அருகே இலங்கை உள்ளதால் தமிழகத்தில் இருந்து கஞ்சா, கடல் அட்டை, பீடி இலை, கடல் பல்லி உள்ளிட்டவைகள் இலங்கைக்கும், அதே போல் இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் தமிழகத்திற்கும் கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தில் இருந்து இராமநாதபுரம் வந்த சரக்கு வாகனத்தை, திருப்புல்லாணி அருகே மெரைன் போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் தலா 30 கிலோ வீதம் 15 மூடைகளில் இருந்த 450 கிலோ தடைசெய்யப்பட்ட சுறா இறக்கை, தலா 50 கிலோ வீதம் 5 மூடைகளில் இருந்த 250 கிலோ ஏலக்காய் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வாகன ஓட்டுநர் சதாம் உசேனிடம் போலீசார் விசாரித்தனர்.
இப்பொருட்களை கீழக்கரை சேர்ந்த காசிம் முகமது என்பவரது குடோனுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில், காசிம் முகமது குடோனை போலீசார் சோதனை செய்தனர். அங்கு பதப்படுத்திய நிலையில் இருந்த 55 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இப்பொருட்கள் அனைத்தும் மருத்துவ பயன்பாட்டிற்காக கீழக்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது என விசாரணையில் தெரிய வந்தது.
பறிமுதல் செய்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.16.62 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த காசிம் முகமது, முகமது மீரா சாகிப், சாகப்தீன் சாகிப், மண்டபத்தைச் சேர்ந்த இம்ரான் கான், சேதுக்கரையைச் சேர்ந்த ஹபீப் உசேன் ஆகியோரை கைது செய்த மெரைன் போலீசார், தமிழகத்தில் இருந்து கடத்தல் பொருட்களை இலங்கைக்கு கடத்தும் முக்கிய ஏஜென்ட் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!