கடன் தொல்லை காரணமாக வீடியோ பதிவு செய்து விவசாயி தற்கொலை

கடன் தொல்லை காரணமாக வீடியோ பதிவு செய்து விவசாயி தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட விவசாயி தங்கவேல்.

முதுகுளத்தூர் அருகே கடன் தொல்லை காரணமாக வீடியோ பதிவுவுக்குப்பின் விவசாயி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (58) விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த கூட்டுறவு கடன் சங்க காசாளர் கருப்பையவிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடன் பிரச்சினையால் சிரமப்பட்ட தங்கவேல், வயலுக்குச் சென்று தனது கடன் பிரச்சினை குறித்தும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவரது அலைபேசியில் வீடியோ எடுத்து அதனை கிராம உதவியாளர் உள்ளிட்ட சிலருக்கு அனுப்பினார்.

பின்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது வீடியோ பார்த்தவர்கள் உடனடியாக வயலுக்கு சென்று அவரை மீட்டு மேலச்சிறுபோது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக விவசாயி தங்கவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

அதில் அவர் பேசும்போது, கூட்டுறவு கடன் சங்க காசாளர் கருப்பையவிடம் ரூ.3 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி நண்பர் ஒருவருக்கு கொடுத்ததாகவும். அதனை கட்டாமல் நண்பர் தலைமறைவாகிவிட்டார். இதனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரூ.3.50 லட்சம் வட்டி மட்டும் கட்டி உள்ளதாகவும் ஆனால் 6 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டுகளில் எழுதி வாங்கிக்கொண்டு இன்னும் அதிகமாக வட்டி கட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் ஊர் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தி விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த விவசாயி தங்கவேல் அவரது விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக இளஞ்செம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்