உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையம்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வாக்கு எண்ணும் மையங்களில் இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 6 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், 33 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 40 காலி பதவி இடங்களுக்கு தேர்தல் வருகின்ற 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 22ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி செப்- 25 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரமக்குடி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் மையமான பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், இரமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்- மாவட்ட தேர்தல் அலுவலக் சந்திரகலா இன்று நேரில் சென்று, வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக, தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறைகள் ஆகியவற்றின் இடவசதி மற்றும் தற்போதைய நிலை, வாக்கு எண்ணும் பணிகளின் போது வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்வதற்கான வழி, வேட்பாளர்கள் / வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி என முறையே போதிய பாதுகாப்பு தடுப்புகள் அமைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் போதிய காவல்துறை பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu