இராமநாதபுரம் மீன் மார்க்கெட்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை
ராமநாதபுரம் மீன் மார்க்கெட் பைல் படம்
சடலங்கள் அழுகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் பார்மலின் என்ற வேதிப்பொருள் மீன்கள் கெட்டுபோகாமல் இருக்க பயன்படுத்தபடுவதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தெரிந்ததே. மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மீன்களை பார்மலின் வேதிப்பொருள் கலந்த தண்ணீரில் மூழ்க வைத்து, அதன்பின்னர் விற்பனைக்காக ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பார்மலின் வேதிப்பொருள் கலந்த மீன்களை உண்டால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் விரைவாக ஏற்படும் என்பதோடு, உடலின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல்தன்மையை இழக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக மாநிலம் முழுவதும் மீன்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில், இராமநாதபுரம் மீன்மார்க்கெட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் லிங்கவேல் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். மீன்களின் கண்விழித்திரையில் ஒளி ஊடுருவும் தன்மை, செவில் சிவப்பு தன்மை, விரைப்புத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்து பரிசோதிக்கப்பட்டன.
அனைத்து கடைகளிலும் உள்ள மீன்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் பார்மலின் வேதிப்பொருட்கள் கலந்து மீன்கள் விற்பனைக்கு வரவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஒரு சில கடைகளில் மீன்கள் புதிதாக இருப்பதாக காட்டுவதற்காக மணல் கொட்டி வைத்திருந்ததை கண்டித்து அறிவுரை வழங்கினர்.
மீன்கள் அழுகாமல் இருக்க ஐஸ் கட்டிகளை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினர். இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:- பரமக்குடியில் நடைபெற்ற சோதனையில் 38 கிலோ அழுகிய மீன்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மீன்கள் ஏற்றுமதியாகும் பகுதி என்பதால் இங்கு பார்மலின் கலந்து வருவதற்கு வாய்ப்பில்லை. பார்மலின் கலந்திருந்தால் மீன்களில் ஈக்கள் மொய்க்காது. இதனை வைத்தே மக்கள் தெரிந்துகொள்ளலாம்.
இதுதொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை பார்மலின் கலவை கண்டறியப்படவில்லை. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu