இம்மானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
எஸ்.பி. கார்த்திக்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகி இம்மானுவேல் சேகரன். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 1924 அக் 9ல் இமானுவேல் சேகரன் பிறந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கு போராடிய தியாகி இமானுவேல் சேகரன், 1956ல் முதுகுளத்தூரில் நடந்த வன்முறை தொடர்பான சமாதானக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். 1957 செப். 11ல் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலடக்கம் செய்யப்பட்ட நினைவிடமான பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று மக்கள் அஞ்சலி செலுத்த இரண்டாவது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 64 வது நினைவு செப்.11ல் அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் கடந்தாண்டு அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று ஐந்து பேருடன் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர். சொந்த வாகனங்கள் ஒதுக்கப்பட்ட நேரங்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அனுமதி பெற்று வந்து செல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் பின்பற்றப்படும் நிலையான வழிகாட்டல் நெறிமுறைகளை நடப்பாண்டும் அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டும் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க, இரண்டாம் ஆண்டாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று மக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இன்று (செப்.9) முதல் இரண்டு மாதங்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
நடப்பாண்டு பாதுகாப்பு பணிகளுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தை முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, திருவாடானை, இராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்பட ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 17 காவல் கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள், 60 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள், 300 சார்பு ஆய்வாளர்கள், 4,000 தாலுகா காவலர்கள், 600 சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போக்குவரத்தை சரி படுத்த 250 போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 30 வழித்தடங்களில் நான்கு சக்கர வாகனங்களிலும் 57 வழித்தடங்களில் இரண்டு சக்கர வாகனங்களிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர், தாசில்தார், துணை தாசில்தார் என அறுபத்து நான்கு நீதித்துறை நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய 150 வழித்தடங்கள் தடை செய்யப்பட்ட வழித்தடங்களாகவும், அவ்வழித்தடங்கள் வழியே அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளன என்றும், 123 பகுதியில் பதட்டமான பகுதிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 39 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu