அரசு பணிகளுக்கான நேர்முகத்தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வேண்டுகோள்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).
தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத்தேர்வு தகுதியும், திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளை பறித்து விடுகிறது. அனைவருக்கும் சம நீதியும், சமுகநீதியும் கிடைக்க நேர்முகத்தேர்வு பெருந்தடையாக உள்ளது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.
ஆந்திரத்தில் முதல் தொகுதி பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 2019-ஆம் ஆண்டு முதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இங்கும் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu