வெயிலிலிருந்து மாணவர்களை காக்க பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க ராமதாஸ் வேண்டுகோள்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். (கோப்பு படம்).
கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தின் சில இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், வெயில் கொடுமையிலிருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன. அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 2வது வாரத்திற்குப் பிறகு தான் திறக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜுன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu