போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
X

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15-ஆம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை என்றும், மாநிலம் முழுவதும் 93.90% பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும் களநிலைமை வேறாக உள்ளது. நகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட, ஊரகப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தினரைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேலை நிறுத்தத்தின் போதும் கடைபிடிக்கப்படும் பொதுவான உத்தி தான் இது. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குகிறார்கள் என்பதாலேயே வேலை நிறுத்தம் தோல்வியடைந்து விட்டதாகவோ, அரசு வெற்றி பெற்று விட்டதாகவோ கருத முடியாது. வேலை நிறுத்தத்தின் தொடக்க நேரத்தில் இயக்கப்படும் எண்ணிக்கையிலான பேருந்துகளை தொடர்ந்து இயக்க முடியாது. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கும் ஓய்வு தேவை என்பதால் நேரம் செல்ல செல்ல இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறையும். இது தான் எதார்த்தம் ஆகும்.

தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் போது, அதில் உள்ள நியாயங்களை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் சரியான உத்தி ஆகும். மாறாக வேலை நிறுத்தத்தை முறியடித்து விட்டோம் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது சரியல்ல. புரையோடிப் போன புண்ணை புணுகு போட்டு மறைக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

8 கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் தொழிற்சங்கங்கள் , தங்களின் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து , ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதுமானது ; 96 மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.2000 கோடியை எவ்வாறு வழங்குவது என்பதைக் கூட பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளன. அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மாதத்திற்கு சுமார் ரூ.20 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இந்தக் கோரிக்கையைக் கூட நிதிநிலையை காரணம் காட்டி நிறைவேற்ற மறுப்பது நியாயமல்ல.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் போக்குவரத்து சூழல் அமைப்பின் ஓர் அங்கம் தான். அவர்கள் இல்லாமல் அரசோ, அரசு இல்லாமல் அவர்களோ செயல்பட முடியாது. இதை உணர்ந்து தன்முனைப்பை (ஈகோ) கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும். அவர்களின் ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றி மற்ற கோரிக்கைகள் தொடர்பாக வாக்குறுதி அளித்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!