இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ 6 ஆயிரம் கோடி மதிப்பு இரயில்வே திட்டங்கள்

மத்திய அமைச்சர் எல்.முருகன்
இந்த நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள இரயில்வே திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி அதன் வலிமையான உள்கட்டமைப்பு வசதிகளில் அமைந்துள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து மைசூருக்கு புதிய வந்தே பாரத் இரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் அமைச்சரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களும் கலந்துகொண்டனர். சென்னை டாக்டர் எம் ஜி ஆர் சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இருவரும் கொடியசைத்து புதிய வந்தே பாரத் இரயிலை தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஒரு இரயில் நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தென்னக இரயிவேயின் கீழ் சென்னை கோட்டத்தின் 79 இரயில் நிலையங்களில் ஒரு இரயில் நிலையம் ஒரு தயாரிப்பு உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன், நாட்டின் வளர்ச்சி அதன் உள்கட்டமைப்பு வசதிகளில் அமைந்துள்ளது என்றும், எனவேதான் பிரதமர் மோடி அவர்கள் உள்கட்டமைப்பு வசதிகளை வலிமையாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்றார். இன்று மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் தொடங்கிவைத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு குறிப்பாக இந்த நிதியாண்டில் மட்டும் 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரயில்வே திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் இது வெறும் 800 கோடியாகத்தான் இருந்தது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு தேவையான நேரத்தில் தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடியும் இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களும் செயல்படுத்திவருவதாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்து, பயணிகள் மற்றும் சரக்கு இரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும் சாகர்மாலா எனும் கப்பல் போக்குவரத்து மற்றும் தொழில்துறை என அனைத்து துறைகளிலும் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தென்னக இரயில்வேயின் கூடுதல் தலைமை மேலாளர் திரு கௌஷல் கிஷோர், இரயில்வே கோட்ட மேலாளர் திரு விஷ்வநாத் பி ஏர்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu