இந்தியைத் திணிக்கத் துடிக்கும் வானொலி: ராமதாஸ் கண்டனம்

இந்தியைத் திணிக்கத் துடிக்கும் வானொலி: ராமதாஸ் கண்டனம்
X

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். (கோப்பு படம்).

ஆல் இந்தியா ரேடியோவை அனைத்திந்திய வானொலி என அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆல் இந்தியா ரேடியோவை அனைத்திந்திய வானொலி என அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய வானொலியின் செய்தி, அறிவிப்புகளில் கூட இந்தியைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்த வேண்டும்!

அனைத்திந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றிலும், அலுவல் சார்ந்த கடிதங்களிலும் இனி ஆல் இந்தியா ரேடியோ என்ற பதத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்ற பதம் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு அதன் தலைமை அலுவலகத்தின் கொள்கைப்பிரிவு ஆணையிட்டுள்ளது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும்.

அகில இந்திய வானொலி தலைமை அலுவலகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆங்கிலச் செய்திகளில் ஆல் இந்திய ரேடியோ என்பதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் செய்திகளிலும் இன்று பிற்பகல் முதல் ஆகாஷ்வாணி என்ற பதம் பயன்படுத்தப்படவிருப்பதாக தெரிகிறது. இதை ஏற்க முடியாது.

என்னென்ன வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு துடிக்கிறது. அதன் வெளிப்பாடு தான் தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் செய்திகளிலும், அறிவிப்புகளிலும் கூட ஆகாஷ்வாணி என்று அறிவிக்க கட்டாயப்படுத்துவதாகும். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், வானொலியின் தலைமையோ இந்தியைத் திணிக்கத் துடிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

வானொலி வேண்டுமானால் தேசிய அளவிலானதாக இருக்கலாம். ஆனால், அதன் நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவிலானவை. அதனால் அதற்கான அறிவிப்புகளும், வானொலி சேவையின் பெயரும் கூட உள்ளூர் மொழிகளில் தான் இருக்க வேண்டும். அனைத்திந்திய வானொலி என்று அழகுத் தமிழில் அழைப்பதற்கு மாற்றாக, ஆகாஷ்வாணி என்று இந்தியில் அறிவிப்பதைக் கேட்க சகிக்காது. அதையும் கடந்து தொடர்ந்து இந்தியைத் திணித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது. எனவே, ஆகாஷ்வாணி அறிவிப்பு ஆணையை ரத்து செய்து விட்டு, தமிழில் ஆல் இந்தியா ரேடியோ என்பதை அனைத்திந்திய வானொலி என்று அறிவிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், விதிகளை மீறி தொழில்நுட்பப் படிப்புகள்; மீண்டும், மீண்டும் இழிவுபடுத்தும் பெரியார் பல்கலைக்கழகம்: தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என தெரிவித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), எம்.டெக் (எரிசக்தி தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை கடந்த 28.04.2023-ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு படிப்புகளையும் நடத்துவதற்கு பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உரிமையும், அதிகாரம் இல்லை. இப்படிப்புகளுக்கான பெரியார் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை அறிவிப்பு விதிகளுக்கு முரணானது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு விதிகளை மீறியது என்று ஏப்ரல் 15-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இது குறித்து ஏப்ரல் 18-ஆம் நாள் சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய வினாவுக்கு விடையளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள்,’’பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை. அந்தப் படிப்பை நிறுத்தும்படி ஆணையிட்டிருக்கிறேன். எம்.டெக் படிப்பையும் நிறுத்த ஆணையிட்டுள்ளேன்” என்று கூறியிருந்தார்.

ஆனால், அமைச்சரின் ஆணையை பொருட்படுத்தாமல் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) பட்டப்படிப்பை பி.எஸ்சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற பெயரில் அதே தனியார் நிறுவனம் மூலம் நடத்த அறிவிக்கை வெளியிட்டுள்ளது பெரியார் பல்கலைக்கழகம். பி.எஸ்சி படிப்பை பல்கலைக்கழகம் நடத்த முடியாது என்பது விதி. விதியை மீறித் தான் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதேபோல் எம்.டெக் படிப்பை நிறுத்த அமைச்சர் ஆணையிட்டும், அந்தப் படிப்பை நடத்த பல்கலைக்கழகம் மீண்டும் விளம்பரம் வெளியிட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சரின் ஆணைக்கு பெரியார் பல்கலைக்கழகம் அளிக்கும் மரியாதை இது தானா? இணைவேந்தரான அமைச்சரை விட உயர்ந்தவரா துணை வேந்தர்?

தமிழ்நாடு அரசை பெரியார் பல்கலைக்கழகம் இழிவுபடுத்தும் இது முதல் முறையல்ல. அரசால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவரையே பொறுப்பு பதிவாளராக அமர்த்தி அரசை இழிவுபடுத்தியவர் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர். இதே நிலை இனியும் தொடர அரசு அனுமதிக்கக்கூடாது. அரசை மதிக்காமல் அத்துமீறி செயல்படும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு: தி.மு.க., களமிறக்க திட்டம் – முடிவை எடுக்கின்ற செயற்குழு!